சொந்த நாட்டில் அசிங்கப்பட்ட இங்கிலாந்து அணி.. 10 இந்திய வீரர்களிடம் மண்டியிட்ட பாஸ்பால் உத்தி

இங்கிலாந்து அணி இந்தியாவிடம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதை அடுத்து இங்கிலாந்து ஊடகங்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இங்கிலாந்து அணியின் Bazball எனும் அதிரடி பாணி கிரிக்கெட் உத்தியை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர். இந்த பெரிய தோல்விக்கு அந்த உத்தி தான் காரணம் என சரமாரியான விமர்சனம் எழுந்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இதில் முதல் போட்டியில் இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்தது.அனைவரும் Bazball உத்தியால் தான் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக கொண்டாடினார்கள்.
ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்துள்ளது. அதுவும் இந்திய அணியில் விராட் கோலி, கே எல் ராகுல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் இல்லாமலேயே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 430 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. ஆனால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 319 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 122 ரன்களும் மட்டுமே எடுத்து 434 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட் பும்ரா பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் ஆட முயற்சி செய்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து இருந்தார். அதை இங்கிலாந்து ஊடகங்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் அப்படி ஆட்டமிழக்காமல் ஓரளவு ரன் குவித்து இருந்தால் முதல் இன்னிங்ஸிலேயே போட்டியின் போக்கு மாறி இருக்கும் என பலரும் கூறினர்.
பொதுவாக ரிவர்ஸ் ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்கள் சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் தான் முயற்சி செய்யப்படும். குறிப்பாக டி20 போட்டிகளில் அதை பல வீரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் ரன் குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே எந்த ஒரு வீரரும் அதை பயன்படுத்துவார்கள். அப்போதும் கூட வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துகளில் ரிவர்ஸ் ஸ்கூப் அடிப்பது மிக ஆபத்தானது.
தற்போது டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் உலகின் சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஜோ ரூட் அறியப்படுகிறார். அப்படி ஒரு வீரர் உலகின் சிறந்த பந்துவீச்சாளரான பும்ராவின் பந்தில் ரிவர்ஸ் ஸ்கூப் ஆடியது எந்த அளவுக்கு மோசமானது. இதற்கு காரணமே எப்போதும் அதிரடி ஆட்டம் ஆட வேண்டும் என்கிற bazball மனநிலை தான். உலகின் சிறந்த பேட்ஸ்மேனை bazball நாசமாக்கி விட்டது. அஸ்வின் பாதி போட்டியில் விலகிய நிலையில், வெறும் 10 இந்திய வீரர்களிடம் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்துள்ளது என இங்கிலாந்து ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றன.