Uluntha Vadai: ருசியான மொறு மொறு உளுந்த வடை செய்வது எப்படி?
ஜனவரி மாதத்தில் மாலை நேரம் கூட, விரைவில் குளிர் வந்துவிடுகிறது. இந்த நேரத்தில் பெய்யும் பனியில் இருந்து தப்பிக்க நமக்கு மொறுமொறுப்பாக,சூடாக ஏதாவது உட்கொள்ளவேண்டும் எனத் தோன்றுவது இயல்புதான்.
அப்படி ஒரு மொறுமொறுப்பான உணவு தான், உளுந்த வடை. வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கிப் பணிசெய்யும் பேச்சிலர்களும் தங்கள் ரூம் திரும்பியதும், அதை முயற்சிசெய்து பார்க்கலாம். அப்படி ஒரு ருசியான எளிதில் செய்யும் சிற்றுண்டி தான், உளுந்த வடை.
தேவையான பொருட்கள்:
உளுந்தம்பருப்பு – 200 கிராம்,
பெரிய வெங்காயம் – 2;
பச்சை மிளகாய் – 4;
கறிவேப்பிலை – சிறிதளவு;
மல்லித்தழை – சிறிதளவு;
மிளகு – ஒரு டீஸ்பூன்;
உப்பு – தேவைக்கேற்ப;
கடலை எண்ணெய் – அரை லிட்டர்;
அரிசி மாவு – 2 டீஸ்பூன்;
நீர் – தேவையான அளவு
செய்முறை: முதலில் ஒரு மணிநேரம் உளுந்தம்பருப்பினை நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். அதன்பின் ஊறவைத்த உளுந்தம்பருப்பினை மிக்ஸியில் போட்டு கெட்டியாக வரும்வகையில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன், இரண்டு டீஸ்பூன் அரிசி மாவினை கலக்கவும். இதனால் இன்னும் அந்த கலவை கொஞ்சம் அடர்த்தியாக மாறும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைத் தனிதனியாக நறுக்கிக்கொள்ளவும். பின், அவை அனைத்தையும் உளுந்தம் மாவில் சேர்க்கவும்.
அதனுடன் தேவைக்கேற்ப உப்பு, மிளகு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின் சிறிய அளவிலான வாழை இலையிலோ அல்லது பிளாஸ்டிக் கவரிலோ, அதன்மேல் சிறிதளவு கடலை எண்ணெயினை தடவிக்கொண்டு, பிசைந்து வைத்த உளுந்த மாவினை உருண்டையாக எடுத்து, அந்த இலையில் வைத்து தட்டிக்கொள்ளவும். பின், அதன் நடுவே துளை போடவும். அதனை எடுத்து, அடுப்பில் வைத்து வாணலியில் காய்ந்த எண்ணெயில் போடவும். முன்பும் பின்பும் திருப்பி நன்கு வேகும் வரை பொறுமை காக்கவும். நன்கு வெந்தபின் வடிகரண்டி மூலம் எடுக்கவும். தற்போது சூப்பரான மொறு மொறு உளுந்த வடை ரெடி.