கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத அம்பயர் மரைஸ் எராஸ்மஸ் ஓய்வு அறிவிப்பு
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மூத்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
முன்னாள் தென்னாப்பிரிக்க உள்நாட்டு கிரிக்கெட் வீரராக இருந்த எராஸ்மஸ் 2006 முதல் சர்வதேச விளையாட்டுகளில் நடுவராக இருந்து வருகிறார். அவர் 80 டெஸ்ட், 124 ஒருநாள் மற்றும் 43 டி20 போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். அவர் 18 மகளிர் டி20 போட்டிகளிலும் நடுவராக செயல்பட்டு இருக்கிறார். மேலும், 131 சர்வதேச போட்டிகளில் டிவி நடுவராக இருந்துள்ளார்.
நடுவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அவர் பேசுகையில், “நான் சலுகைகளையும் பயணத்தையும் இழக்கிறேன். ஆனால் இதுவரை எனது வசதியான வாழ்க்கையை விட்டு விலகி வாழ்ந்தது போதுமானது. இனி மிகவும் சலிப்பான வாழ்க்கையை நான் தேடுகிறேன். கடந்த ஆண்டு அக்டோபரில் இது குறித்து நான் முடிவெடுத்தேன், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எனது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்கிறேன் என்று ஐசிசிக்கு தெரிவித்தேன்.” என்று கூறினார்.
மரைஸ் எராஸ்மஸ், நடுவராக மாறுவதற்கு முன்பு, தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு கிரிக்கெட் வீரராக ஆடி வந்தார். போலண்ட் அணியின் வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தார். அவர் ஐசிசி சிறந்த நடுவருக்கான விருதை மூன்று முறை (2016, 2017 மற்றும் 2021) வென்றார். அதன் மூலம் சக நடுவர்களான ரிச்சர்ட் கெட்டில்பரோ மற்றும் அலீம் டார் ஆகியோருடன் இணைந்து மூன்று முறை சிறந்த நடுவர் விருதை வென்ற பெருமையை பெற்றார். மற்றொரு ஓய்வு பெற்ற நடுவரான சைமன் டஃபல் ஐந்து முறை சிறந்த நடுவர் விருதை வென்று முதலிடத்தில் இருக்கிறார்.
சர்வதேச நடுவராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவரது திட்டங்களைப் பற்றி கேட்டதற்கு, எராஸ்மஸ், “முதல் இரண்டு மாதங்களுக்கு நான் குளிர்காலத்தை அனுபவிக்கப் போகிறேன். நாங்கள் உள்நாட்டில் சில பயணங்களைத் திட்டமிட்டுள்ளோம், செப்டம்பர் முதல் நான் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்புடன் சேர்ந்து பணியாற்ற இருக்கிறேன்” என்றார்.