நடுவர்கள் மது அருந்திவிட்டு களத்திற்கு வருகிறார்கள்.. பிசிசிஐ நடவடிக்கை எடுக்கனும்.. பரபர புகார்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற இந்திய அணிக்காக விளையாடிய மனோஜ் திவாரி தற்போது பரபரப்பு குற்றச்சாட்டுகளை அளித்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தான் சதம் அடித்த பிறகு இந்திய அணியில் இருந்து தோனி தம்மை அதிரடியாக நீக்கியது ஏன் என்று அவரிடம் கேள்வி கேட்க விரும்புவதாக அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு குற்றச்சாட்டு தற்போது பிசிசிஐயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ரஞ்சி கிரிக்கெட்டில் நடுவர்களின் செயல்பாடு மிகவும் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ரஞ்சிப் போட்டிகளில் நடுவர்களின் செயல்பாடுகளை பிசிசிஐ கண்காணிக்க வேண்டும்.சில சமயம் அவர்கள் செய்யும் தவறுகள் குழந்தைத்தனமாக இருக்கிறது.

நான் ஒரு, இரண்டு சீசன்களை பார்த்து கூறவில்லை. பல ஆண்டுகளாக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி விட்டு தான் பேசுகிறேன். ஒரு சமயம் நான் ஒரு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு சுழற் பந்துவீச்சாளர் பந்து வீசும் போது நோ என்று கூறிக் கொண்டே வீசினார். அப்போது நான் நடுவரிடம் அது குறித்து புகார் அளிக்க சென்றேன். அவர் நோ என்று கூறினால் நான் அது நீங்கள் தான் கூறுகிறீர்கள் என்று நினைத்து நான் அதை அடித்த அவுட் ஆகி இருப்பேன்.

பவுலர் அப்படி கத்தினால் இது நோபாலா இல்லையா என்று எனக்கு தெரியாது. எனவே வீரரை அழைத்து கண்டியுங்கள் என்று கூறினேன். அதற்கு பவுலர் நோ என்று கத்தியது என் காதில் கேட்கவே இல்லை என்று கூறினார். மேலும் அதே போட்டியில் ஒவ்வொரு பந்தையும் அது நோபாலா இல்லையா என்று நடுவர் மூன்றாம் நடுவரின் உதவியை கேட்டு நாடினார்.

இது குறித்து நான் கேட்டதற்கு அந்த நடுவர், நான் பவுலர் எங்கே கால் வைக்கிறார் என்று பார்த்தால் பேட்ஸ்மேன் அவுட்டா இல்லையா என்பது எனக்கு எப்படி தெரியும் என்று கூறுவார். மேலும் பேட்டில் பந்து பட்டால் அந்த சத்தம் மைதானத்தில் இருக்கும் பலருக்கும் கேட்கும். ஆனால் நடுவருக்கு மட்டும் கேட்காது என்று கூறுவார். இதற்குத்தான் நான் சொல்லுகிறேன் வீரர்களுக்கு உடல் பரிசோதனை செய்கிறார்கள்.போதை மருந்து மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளை வீரர்கள் எடுத்துக் கொண்டார்களா என்ற பரிசோதனை நடத்தப்படுகிறது.

அதைப்போல் ரஞ்சி போட்டிகளில் நடுவராக இருக்கும் நபர்களுக்கும் போதை மருந்து பயன்படுத்திருக்கிறார்களா என்று சோதனை செய்ய வேண்டும். நான் பல போட்டிகளில் பல நடுவர்களை பார்த்திருக்கிறேன். மது போதையிலே அவர்கள் களத்திற்கு வந்து நடுவராக செயல்படுவார்கள் சில நடுவர்கள் போதையில் தூங்கி வழிவார்கள்.இப்படி இருக்கும் போது போட்டி எவ்வாறு சரியாக நடத்தப்படும்.

நான் ஒரு நடுவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டேன் நைட் போதை ரொம்ப அதிகமா என்று கேட்டேன்.அதற்கு ஆம் நான் விஸ்கியை அடித்தேன் என்று கூறி நடுவர் சிரிக்கிறார். சில நடுவர்களுக்கு பார்வை குறைபாடுகளும் இருக்கிறது. இதனால் ஒவ்வொரு சீசன் தொடக்கத்திலும் நடுவருக்கு காது மற்றும் கண் சரியாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய வேண்டும் என மனோஜ் திவாரி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *