அக்டோபர் 7 படுகொலைகளுக்கு ஹமாஸ் படைகளுக்கு உதவிய ஐ.நா ஊழியர்கள்: அம்பலமாகும் பகீர் தகவல்

இஸ்ரேல் எல்லையில் அக்டோபர் 7ம் திகதி முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு ஐ.நா ஊழியர்கள் சிலர் ஹமாஸ் படைகளுக்கு உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
UNRWA-வுக்கு நிதியுதவி
ஐ.நா ஊழியர்கள் தங்கள் உத்தியோகப்பூர்வ வாகனங்களை ஹமாஸ் படையினருக்காக பயன்படுத்தியுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த நிலையிலேயே பிரித்தானியா உள்ளிட்ட 9 நாடுகள் இணைந்து ஐ.நா மன்றத்தின் பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனமான UNRWA-வுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து நிறுத்தியுள்ளது.
அக்டோபர் 7 தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பிய பலர், ஐ.நா ஊழியர்களின் பங்களிப்பை அம்பலப்படுத்தியதாக இஸ்ரேல் தரப்பு வெளிப்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான மக்கள் தங்கள் தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, காஸாவில் பணியாற்றி வந்த 12 ஐ.நா ஊழியர்கள் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஹமாஸ் படைகளுக்கு உதவிய ஐ.நா ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று இஸ்ரேல் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஹமாஸ் படையினர் ஊடுருவல்
UNRWA அமைப்பை பல ஆண்டுகளாக கண்காணித்து வருவதாகவும், அந்த அமைப்பில் ஹமாஸ் படையினர் ஊடுருவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பு வாதிட்டுள்ளது.
இதனிடையே, UNRWA அமைப்புக்கு நிதியை நிறுத்தியுள்ள பிரித்தானியா காஸாவில் செயல்பட்டு வரும் பிற அமைப்புகளுக்கு நிதியுதவிகளை தொடர்ந்து முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
UNRWA அமைப்பானது பாலஸ்தீன மக்களின் கல்வி, சுகாதாரம், சமூக சேவை மற்றும் வாழ்க்கைத்தரம் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் அக்டோபர் 7 தாக்குதல் நடந்து சில மணி நேரங்களில், ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக UNRWA ஊழியர்கள் பலர் செயல்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இஸ்ரேலில் இந்த பகிரங்கமான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஐ.நா தலைவர் Antonio Guterres காஸா நிவாரணத்திற்கு தொடர்ந்து நிதியுதவி செய்யுமாறு உலக நாடுகளிடம் கெஞ்சியுள்ளார்.