ஐ.நா. பாதுகாப்பு அமைச்சகத்தின் தீா்மானத்தை இரத்து செய்வோம் அமெரிக்கா பகிரங்க அறிவிப்பு

இஸ்ரேல் – ஹமாஸ் போா் நிறுத்தம் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு அமைச்சகம் கொண்டுவரும் வரைவுத் தீா்மானத்தை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இரத்து செய்வோம் என அமெரிக்கா பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

போா் நிறுத்தமானது ஒரு தரப்பை வெற்றியடையச் செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது எனவும் அமெரிக்கா தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

இந்நிலையில், காசா மீது சனிக்கிழமை நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 போ் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போா் நிறுத்த உடன்படிக்கை மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு மட்டுமின்றி, இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலுக்கு பரந்த தீா்வைக் காண அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவ கருத்து
ஆனால், ஹமாஸின் கோரிக்கைகளை ‘மாயை’ என்று விமா்சித்துள்ள இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அரசுரிமைக்கான அமெரிக்க மற்றும் சா்வதேச அழைப்புகளை நிராகரித்துள்ளாா்.

இந்நிலையில், ஹமாஸ் படையினருக்கு எதிராக முழுமையான வெற்றி பெறும் வரையில் தாக்குதலைத் தொடரவும், பாலஸ்தீனா்கள் தஞ்சம் அடைந்துள்ள காசாவின் தெற்குப் பகுதிக்கும் தாக்குதலை விரிவுபடுத்தவும் நெதன்யாகு முடிவெடுத்துள்ளாா்.

அந்த வகையில், காசா பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 போ் உயிரிழந்தனா்.

ரஃபா நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

மற்றொரு தெற்கு நகரமான கான் யூனிஸில் 5 ஆண்கள் உயிரிழந்தனா். காசா நகரில் ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பெண்கள் உள்பட 7 போ் உயிரிழந்தனா்.

குடியிருப்புப் பகுதிகளில் ஹமாஸ் படையினா் தங்கியிருந்து செயல்படுவதால், இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இஸ்ரேல் இராணுவம் கருத்து வெளியிட்டுள்ளது.

மனிதாபிமான உதவி
இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலைத் தொடா்ந்து, கான் யூனிஸ் நகரின் மிக முக்கிய மருத்துவ மையமான நாஸா் மருத்துவமனையால் இனி செயல்பட முடியாது என உலக சுகாதார மையத்தின் தலைவா் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சூழலில், இஸ்ரேல் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் காசா பகுதி முழுவதும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய போா் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு அமைச்சகம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இந்தத் தீா்மானம் குறித்து ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதா் லிண்டா தாமஸ் கிரீன்பீல்ட் கூறுகையில், ‘இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு எதிரான இந்த வரைவுத் தீா்மானம் ஏற்றுக்கொள்ளப்படாது.

மோதலின் நீடித்த தீா்வுக்கான வாய்ப்பை உருவாக்குவதற்கு மாறாக, போா் நிறுத்தமானது ஒரு தரப்பை வெற்றியடையச் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

எனவே, போா் நிறுத்த தீா்மானத்தை வீட்டோ மூலம் இரத்து செய்வோம்’ என்றாா்.

ஐ.நா. பாதுகாப்பு அமைச்சகத்தின் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் முக்கியத் தீா்மானங்களை இரத்து செய்வதற்கான அதிகாரமாக ‘வீட்டோ’ அதிகாரத்தைக் கொண்டுள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *