‘மாமா எங்கள் எதிர்காலம் உங்கள் கையில்’: ராகுலுடன் பயணம் செய்த குழந்தைகள்!

மணிப்பூர் மாநிலம் தௌபல் மாவட்டம் கோங்ஜோமில் இருந்து ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ஆம் தேதியன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்ரா நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி நிறைவடையவுள்ளது.

மணிப்பூரில் தொடங்கியுள்ள ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை, சுமார் 6,200 கிமீ பயணித்து அசாம், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவடையவுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் வரவுள்ளதால், கடந்த முறை போன்று அல்லாமல் இந்த யாத்திரையை நடைபயணமாகவும், வாகனத்திலும் ராகுல் காந்தி மேற்கொள்ளவுள்ளார்.

மணிப்பூர் மாநிலம் தௌபல் மாவட்டம் கோங்ஜோமில் தொடங்கிய ராகுலின் முதல் நாள் யாத்திரை, தலைநகர் இம்பாலில் உள்ள செக்மாய் எனுமிடத்தில் நிறைவடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெயினரில் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவரும் இரவில் தங்கி ஓய்வெடுத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, செக்மாயில் இருந்து இன்று காலை பாரத் ஜோடோ நீதி யாத்திரை தொடங்கியது. காலையில் பொதுமக்களுடன் தேநீர் அருந்தி அவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, தனது நடைபயணத்தை தொடங்கினார். சிறிது நேரம் நடந்து சென்ற யாத்திரை பின்னர், பேருந்துக்கு மாறியது. அதன்பிறகு, மீண்டும் நடைபயணம், மீண்டும் பேருந்து என அவரது யாத்திரை செல்கிறது. இதன்போது பொதுமக்களுடன் உரையாடும் ராகுல் காந்தி, அவர்களது குறைகளை கேட்டறிகிறார். அவர்களுடன் இயல்பாக பேசி அவர்களுடனேயே பயணிக்கிறார்.

ராகுல் காந்தி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய் யாத்திரையில் அவருடன் குழந்தைகள் கலந்து கொண்டனர். பேருந்தில் அவரோடு பயணித்த மணிப்பூர் குழந்தைகள், ‘மாமா ராகுல், நாங்கள் இந்தியாவின் எதிர்காலம். ஆனால், எங்கள் எதிர்காலம் உங்கள் கையில்’; ‘மாமா ராகுல் உங்களுடன் நாங்கள் நடக்கிறோம்” என்ற பதாகைகளுடன் கையில் ஏந்தி பயணித்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி, “குழந்தைகள் ஒரு தோட்டத்தில் மொட்டுகள் போன்றவர்கள், அவர்கள் தேசத்தின் எதிர்காலம், நாளைய குடிமக்கள் என்பதால் அவர்கள் கவனமாகவும் அன்பாகவும் வளர்க்கப்பட வேண்டும்.” என மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியவற்றை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

https://twitter.com/INCIndia/status/1746794813851304315

 

யாத்திரைக்கு இடையே பேருந்தில் இருந்தபடி பொதுமக்களிடம் உரையாற்றிய ராகுல் காந்தி, “கடந்த ஆண்டு, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டோம், இதன் மூலம் இந்திய மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதன்பிறகு, நாங்கள் கிழக்கிலிருந்து மேற்காக மற்றொரு யாத்திரை செல்ல விரும்பினோம், மணிப்பூர் மக்கள் என்ன அனுபவித்திருக்கிறார்கள் என்பதை இந்திய மக்கள் உணரும் வகையில், மணிப்பூரில் இருந்து யாத்திரையைத் தொடங்குவதே மிகவும் சக்திவாய்ந்த விஷயம் என்று முடிவு செய்தோம். மணிப்பூரில் அமைதியை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம்.” என்றார்.

மணிப்பூர் மாநிலம் செக்மாயில் தொடங்கிய ராகுல் காந்தியின் இரண்டாவது நாள் யாத்திரை நாகாலாந்து மாநிலத்தில் இன்று முடிவடைகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *