Under 19 WC- பைனலில் மீண்டும் இந்தியா, ஆஸ்திரேலியா.. சீனியர்களுக்காக பழித்தீர்க்குமா இளம் சிங்கங்கள்
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் பல பரிட்சை நடத்துகின்றன. இந்த செய்தியை கேட்ட உடனே நமது நாட்டு ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தாலும் பழி தீர்ப்பதற்கு தயாராகி விட்டார்கள்.
காரணம் அரையிறுதியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் பைனலில் மோதி இருக்கும். ஆனால் தற்போது அது நடைபெறவில்லை. எனினும் ஆஸ்திரேலிய அணி வந்திருப்பதும் இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நவம்பர் 19ஆம் தேதி அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை இந்திய அணி தோல்வியே தழுவாமல் சென்ற நிலையில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு தோல்வியை தழுவியது. அதன் பிறகு நிச்சயமாக உலகக்கோப்பை மீது காலை வைத்து மிட்செல் மார்ஷ் கொண்டாடியது நமது நாட்டு ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
தற்போது இதற்கு எல்லாம் பழி தீர்க்கும் விதமாக மீண்டும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலகக்கோப்பை போட்டியில் பைனலில் சந்திக்கின்றன. இந்த தொடரில் இரு அணிகளும் தோல்வியே தழுவாமல் இறுதிப்போட்டி வரை வந்திருக்கிறது. இந்தியாவை எதிர்கொள்வது குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணி கேப்டன், இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு கிளாஸ் இருக்கிறது.
நிச்சயமாக அவர்கள் எங்களுக்கு கடும் சவால்களை கொடுப்பார்கள். அந்த சவால்களை நாங்கள் விரும்புகிறோம். அந்தப் போட்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.ஏற்கனவே இவ்விரு அணிகளும் கடைசியாக 2018 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோதியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடி தான் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவை காட்டிலும் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே பலமாக விளங்குகிறது. இந்தியாவின் சுழற் பந்துவீச்சு ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நிச்சயம் கடும் சிரமத்தை கொடுக்கும். இரு அணிகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை கேப்டவுனில் இந்திய நேரப்படி 1. 30 மணிக்கு மோதுகிறது.