நாட்டின் மிகவும் தீவிரமான பிரச்னை வேலைவாய்ப்பின்மை: கார்கே
நாட்டின் மிகவும் தீவிரமான பிரச்னையாக வேலைவாய்ப்பின்மை இருந்து வருகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற பா.ஜ.,வின் வாக்குறுதிகள் என்ன ஆனது என இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பணி நியமனங்களுக்கான போட்டித்தேர்வு எழுதுவது முதல் வேலையை உறுதி செய்யும் வரையிலான நடவடிக்கைகள் ஏன் சிக்கலானதாக உள்ளது. வேலைவாய்ப்பின்மையே நாட்டின் மிகவும் தீவிரமான பிரச்னையாக இருந்து வருகிறது.2022- 23 ம் ஆண்டுக்கான தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கையின் படி, 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 10 சதவீதம் ஆக உள்ளது.
இந்த எண்ணிக்கை கிராமப்புறத்தில் 8.3 சதவீதமாகவும், நகர்ப்பகுதிகளில் 13.8 சதவீதமாகவும் உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டு பல கோடி வேலைவாய்ப்புகள் ஒழிக்கப்பட்டன. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே கூறியுள்ளார்.