வேலையின்மை… போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு படையெடுக்கும் ஆசிய நாடொன்றின் மக்கள்
வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு செல்லத் துணிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலில் ஐந்து மடங்கு வருவாய்
இந்தியாவின் ஹரியானா மாகாணத்தில் இஸ்ரேலுக்கான ஆட்சேர்ப்பு முகாம் ஒன்றில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். மேசன்கள், பெயிண்டர்கள், எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள் மற்றும் சில விவசாயிகள் இஸ்ரேலில் வேலைக்கு செல்ல தயாராக இருப்பதாகவும், சிலர் போர் பகுதிக்குச் செல்லும் அபாயத்திற்கும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், தற்போதைய சூழலில் இந்தியாவில் கிடைப்பதைவிட இஸ்ரேலில் ஐந்து மடங்கு வருவாய் ஈட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Lekharam என்பவர் தெரிவிக்கையில், ஆட்சியாளர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதை விட்டுவிட்டு, அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளும் நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
மரணம் எங்கிருந்தாலும் வரும் என தெரிவித்துள்ள அவர், இஸ்ரேலுக்கு சென்று உழைத்து கொஞ்ச நாள் செலவிட்ட பின்னர் திரும்ப வேண்டும் என்றார். 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.6 சதவிகிதம் என அரசாங்க தரவுகள் தெரிவித்தாலும், 29 வயதுக்கும் குறைவான வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 17 சதவிகிதம் இருப்பதாக கூறப்படுகிறது.