எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஐபிஎல் அணியோடு கூட்டு சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த அஜித் அகர்கர்
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சரியாக ரன் குவிக்காத ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது டேட்ஸ் போட்டிக்கு பின் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அவரை ரஞ்சி ட்ராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்று பேட்டிங் ஃபார்மை மீட்குமாறு கூறியது இந்திய அணி நிர்வாகம்.
ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி ட்ராபி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதை அடுத்து அவருக்கு இந்த ஆண்டிற்கான பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. ஆனால், பிசிசிஐ ஒப்பந்தம் அவருக்கு கிடைக்காமல் போகக் காரணம் ரஞ்சி ட்ராபி தொடரில் அவர் பங்கேற்காதது இல்லை, மாறாக அவர் அந்த நேரத்தில் அவரது ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பயிற்சி செய்து இருக்கிறார்.
அது மட்டுமின்றி ரஞ்சி ட்ராபி தொடரில் பங்கேற்காமல் இருக்க தனக்கு முதுகு வலி இருப்பதாக அவர் அவரது மாநில அணியான மும்பை அணியிடம் கூறி இருந்தார். இந்த தகவலை அறிந்த தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், பிசிசிஐ ஒப்பந்தம் குறித்த இறுதி முடிவை எடுக்கும் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த முறை ஒப்பந்தம் கொடுக்க வேண்டாம் என கூறி விட்டதாகவும், அதை பிசிசிஐ உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்திய அணியில் இருந்து விலகிய உடனே ரஞ்சி ட்ராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை ஆடுமாறு கூறிய போது அவர் அப்போதே தனக்கு முதுகு வலி இருப்பதாகக் கூறினார். ஆனால், தேசிய கிரிக்கெட் அகாடமி அவரை பரிசோதித்த பின் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறி விட்டது. எனவே, ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணியிடமும், இந்திய அணி நிர்வாகத்திடமும் தனக்கு வலி இருப்பதாக பொய்யான தகவலை கூறி விட்டதாக சர்ச்சை வெடித்தது.
அது ஒரு பக்கம் நடந்த போது, அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முகாமில் பயிற்சி செய்தது பிசிசிஐ சார்ந்த அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. குறிப்பாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கடும் அதிருப்தி அடைந்து இருக்கிறார். பல முறை ஸ்ரேயாஸ் ஐயர் ஃபார்மில் இல்லாத போதும் அவருக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கிய நிலையில், தங்கள் பேச்சை மதிக்காமல் அவர் ஐபிஎல் அணியோடு கூட்டு சேர்ந்ததை கண்டு அவரது பிசிசிஐ ஒப்பந்தத்தை ரத்து செய்ய காரணமாக இருந்திருக்கிறார் அஜித் அகர்கர்.