திருச்சி கொள்ளிடம் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொலை..!
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழ் 10வது கட்டை பகுதியில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் தலை மற்றும் கை எரிந்த நிலையில் சடலமாக இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு உடனடியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்குள்ள தடயங்களை சேகரித்தனர்.
பின்னர் பாதி எரிந்த நிலையில் இருந்த பெண் சடலத்தை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் கொலையான பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர். எப்படி இங்கு வந்தார்? எதற்காக யார் எரித்து கொலை செய்தனர் என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றின் அருகே அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.