7,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் யுனிலிவர்.. இந்திய ஊழியர்கள் பீதி..?

கொரோனா காலத்தில் இருந்தே பெரு நிறுவனங்களில் தொடங்கி சிறு நிறுவனங்கள் வரை ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்ந்து வருகிறது. 2024ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே பெரு நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அந்த பட்டியலில் யுனிலிவர் நிறுவனமும் இணைந்துள்ளது.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த பன்னாட்டு நுகர்வோர் உற்பத்தி நிறுவனமான யுனிலிவர், உலகம் முழுவதும் பல கிளைகளுடன், பல பெயர்களில் இயங்கி வருகிறது, இந்தியாவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் பெயரில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின், மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களுக்கு உலக அளவில் டிமாண்ட் அதிகம். இந்நிலையில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ள யுனிலிவர் நிறுவனம், ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் ஐஸ்கிரீம் யூனிட்டை தனி வணிகமாக பிரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது யுனிலிவர் நிறுவனத்தின் கீழ் மேக்னம் மற்றும் பென் & ஜெர்ரி பிராண்டுகளின் பெயரில் ஐஸ்கிரீம் யூனிட்கள் செயல்பட்டு வருகின்றன. ஐஸ்கிரீம் யூனிட்டை தனியாக பிரிப்பதன் மூலம் சுமார் 7,500 பணியாளர்கள் வேலைகளை இழக்க உள்ளனர்.
2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 209 நிறுவனங்கள் சுமார் 50,000 மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. நிறுவனத்தை மறுசீரமைப்பது, சிக்கன நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு இந்த பணி நீக்க அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் யுனிலிவர் நிறுவனம் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஊழியர்களை வெளியேற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
யுனிலிவரில் மொத்தமாக 1,28,000 பேர் வேலை செய்கின்றனர். தற்போது பணி நீக்க அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் 5.9% பேர் இதனால் பாதிக்கப்பட உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
யுனிலிவர் நிறுவனம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் ஐஸ்கிரீம் தொழில் என்பது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடைமுறைகளைக் கொண்டுள்ளது.
எனவே அதனை தனி நிறுவனமாக பிரிக்கிறோம் என யுனிலிவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இந்தியாவிலும் இந்த பிராண்டின் கீழ் செயல்படும் நிறுவனங்களை மாற்றி அமைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என ஹிந்துஸ்தான் யுனிலிவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் 2023 ஆம் நிதி ஆண்டில் 59,144 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதில் ஐஸ்கிரீம் யூனிட்டுகள் மூலம் 3% வருவாய் கிடைத்துள்ளது. உலக அளவில் முதல் 10 இடங்களில் உள்ள ஐஸ்கிரீம் பிராண்டுகளில் 5 பிராண்டுகள் யுனிலிவருக்கு சொந்தமானவை.
இந்தியாவில் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்திற்கு ஐஸ்கிரீம் யூனிட்டுகள் மூலம் 3% வர்த்தகம் தான் நடைபெறுகிறது. ஆனால் தாய் நிறுவனமான யுனிலிவருக்கு இது 13.15% ஆகும்.
இந்தியாவில் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் கீழ் குவாலிட்டி வால்ஸ், கார்னெட்டோ, மேக்னம் ஆகிய பிராண்டுகளின் பெயர்களில் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 2023 ஆம் நிதியாண்டில் ஐஸ்கிரீம் யூனிட்கள் மூலம் 14,876 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளன.