`ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், மனசாட்சிப்படி தமிழக அரசைப் பாராட்டியிருக்கிறார்!’ – அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்திலிருந்து, `கேலோ இந்தியா’ இளைஞர்கள் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியைத் தொடங்கிவைக்க வருகை தந்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பில்கிஸ் பானு வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. நீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்புகளை சரி, தவறு என்று விமர்சிக்கும் உரிமை, தனி நபர்களுக்குக் கிடையாது. எந்தத் தீர்ப்பையும் எந்தக் கண்ணோட்டம் கொண்டும் நாம் பார்க்க முடியாது. உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கக்கூடிய தீர்ப்பு, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்ப்புதான். அதை எதிர்த்து மாற்றம் என்று சொல்லக்கூடிய உரிமை யாருக்கும் கிடையாது. ஒரே நாடு ஒரே தேர்தல் எந்த அவசரகதியில் கொண்டுவரப்பட்டாலும்கூட, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதனை அமல்படுத்த முடியாது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிதான் ஆட்சிக்கு வரும். அதை அப்போது பார்த்துக் கொள்வோம். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு கால அவகாசம்தான் கேட்டோமே தவிர, ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறவில்லை. போக்குவரத்துத்துறை அமைச்சர், ‘பொங்கலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை வைத்துக் கொள்வோம்’ என்று கேட்டாரே தவிர, எந்த மறுப்பையும் அவர் தெரிவிக்கவில்லை. பேச்சுவார்த்தைக்குப் பின்னர்தான் அந்தக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது தெரியவரும். ஆனால், அதற்கு முன்பாகவே போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அவசரப்பட்டு விட்டார்கள் என்பதுதான், எனது கருத்து.