தெரியாம தப்பு நடந்துருக்கலாம்.. என்ன இருந்தாலும் ரோஹித் சர்மா அதை செஞ்சுருக்கக் கூடாது.. ஏபிடி கருத்து

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற அந்தத் தொடரில் முடிந்தளவுக்கு போராடியும் தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவை ஒரு போட்டியில் கூட வீழ்த்த முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தது.
இருப்பினும் பெங்களூருவில் நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியா முதலில் அடித்த 212 ரன்களை ஆப்கானிஸ்தானும் 20 ஓவர்களில் சரியாக எடுத்தது. அதனால் போட்டி சமனில் முடிந்ததை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரிலும் 2 அணிகளும் சரியாக தலா 16 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.
வந்திருக்க கூடாது:
அதற்காக மீண்டும் நடத்தப்பட்ட 2வது சூப்பர் ஓவரில் இந்தியா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
அதை விட அப்போட்டியில் முதல் சூப்பர் ஓவரில் களமிறங்கி அதிரடியாக 13* ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா 2வது சூப்பர் ஓவரிலும் பேட்டிங் செய்து 11* ரன்கள் குவித்தது சர்ச்சையாக மாறியது.
அதாவது முதல் சூப்பர் ஓவரின் 5வது பந்தில் ரிட்டையர்ட் அவுட்டான அவர் மீண்டும் 2வது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்திருக்கக் கூடாது என்று எதிரணி ரசிகர்கள் விமர்சித்தனர். சொல்லப்போனால் ஒரு சூப்பர் ஓவரில் விளையாடிய பேட்ஸ்மேன் அல்லது பவுலர் மீண்டும் அதே போட்டியின் 2வது சூப்பர் ஓவரில் பேட்டிங் அல்லது பவுலிங் செய்யக் கூடாது என்பது பொதுவான விதிமுறையாகும்.