தமிழகத்துக்கு வரலாறு காணாத நிதி: பிரதமர் மோடி

உலகின் எந்த இடத்துக்குச் சென்றாலும் தமிழ் மொழியை புகழாமல் இருந்ததில்லை. தமிழகத்துக்கு வந்தால் புதிய சக்தி பிறக்கிறது என்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறினார்.

மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும், ரூ.20 ஆயிரம் கோடியில் நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, 2024 ஆண்டுக்கான என் முதல் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடப்பது பெருமையாக உள்ளது. ரூ.20 ஆயிரம் கோடியில் தொடங்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் தமிழ்நாட்டை வளப்படுத்தும். இந்த திட்டங்கள் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்கள் கடினமானதாக இருந்தது. தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் உயிர், உடமைகளை இழந்து உள்ளனர். அந்த மக்களுக்கு மத்திய அரசு துணை இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்த விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் கேப்டனாக இருந்துள்ளார். அவர் தேசிய நலனுக்கு தான் எப்போதும் முக்கியத்துவம் தருவார்.

அடுத்த 25 ஆண்டுகால கட்டத்தில் பாரதத்தை வளர்ச்சி அடைந்ததாக மாற்ற வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் இரண்டும் சேர்ந்த வளர்ச்சி தான். பாரத நாட்டின் வளம் மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு தான் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் தான் திருவள்ளுவர் உள்ளிட்டோர் சிறப்பான இலக்கியங்களை படைத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டிற்கு நான் வரும் போதெல்லாம் புதிய சக்தியை எனக்குள் நிரப்பி செல்கிறேன். எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு அவர்களிடமிருந்து தமிழ் கலாச்சாரத்தை நான் கற்று கொள்கிறேன். நான் எங்கு சென்றாலும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் குறித்து பேச மறப்பதில்லை.

எனக்கு தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் குறித்து உற்சாகம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. 2014ஆம் ஆண்டுக்கு முன் பெற்ற நிதியை விட 2.5 மடங்கு அதிக நிதியை தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து பெற்று வருகிறது. தமிழகத்துக்கு வரலாறு காணாத நிதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற நோக்கல் மத்திய அரசு செயல்படுகிறது. அதனால்தான் முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *