உ.பி அரசு அதிரடி..! 50 லட்சம் பேர் எழுதிய காவலர் தேர்வு ரத்து..!
உத்திர பிரதேச மாநில காவல் துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் (Constable) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 60,244 பணியிடங்கள் குறித்த அறிவிப்பை UPPBPB தேர்வு வாரியம் ஆனது சமீபத்தில் அறிவித்தது. இப்பணிக்கு 50,14,921 நபர்கள் இணையவழி மூலம் விண்ணப்பித்தார்கள். இவ்வாறு விண்ணப்பித்த நபர்களுக்கான நுழைவுச் சீட்டானது பிப். 13ம் தேதி வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கான்ஸ்டபிள் பணிக்கான எழுத்து தேர்வானது இவ்வாண்டு பிப்ரவரி 17ம் மற்றும் 18ம் தேதிகளில் நடத்தப்பட்டது. சுமார் 35 லட்சம் ஆண்கள் மற்றும் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்ட இத்தேர்வானது ரத்து செய்யப்படுவதாக உத்திர பிரதேச மாநில அரசானது சற்றுமுன் அறிவித்துள்ளது. இதற்கு தேர்வுக்கு முன்னரே வினாத்தாள்கள் கசிந்து சமூக வலைதளங்களில் பரவியதும், அதன் மேல் எழுந்த புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையும் தான் காரணம் என மாநில அரசானது திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.