பிரான்ஸிலும் வந்தாச்சு யுபிஐ! இந்தியர்களுக்கு கொண்டாட்டம் தான்!

யுபிஐ எனப்படும் உடனடி பணப்பரிமாற்ற சேவைகள் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மிகவும் எளிதாக்கிவிட்டன. ஜிபே, போன்பே போன்ற செயலிகளில் யுபிஐ பயன்படுத்தி நாம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தை பெறலாம்.

இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன் மாதிரியாக இருந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன. அந்த பட்டியலில் பிரான்ஸும் தற்போது இணைந்துள்ளது.

பிரான்ஸிலும் யுபிஐ பயன்படுத்தலாம்: பாரிஸில் உள்ள இந்திய தூதகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் NPCI-இன் சர்வதேச பரிமாற்ற அமைப்பும், பிரான்ஸின் பரிவர்த்தனைகள் அமைப்பும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டன. இதன் படி, இனி பிரான்ஸ் நாட்டில் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்த இயலும்.

அதாவது பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் யூபிஐ வாயிலாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

ஈஃபிள் டவரை பார்க்க யுபிஐ-இல் பணம் செலுத்தலாம்: இந்தியர்கள் இனி ஈஃபிள் டவரை பார்க்க வேண்டுமெனில் முன் கூட்டியே யுபிஐ மூலம் பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். பிரான்ஸில் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்கும் முதல் அமைப்பு ஈஃபிள் டவர் நிர்வாகம் என தெரிவித்துள்ள NPCI, விரைவில் பிரான்ஸின் அனைத்து சுற்றுலா தளங்களிலும் இது விரிவாக்கப்படும் என கூறியுள்ளது.

அனைத்து நாடுகளுக்கும் விரிவாக்க திட்டம்: யுபிஐ பரிவர்த்தனையை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக NPCI தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய பணப் பரிமாற்ற முறையாக யுபிஐ மாறும் என்றும் இதற்காக அனைத்து நிதி நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் NPCI கூறியுள்ளது.

சொன்னதை செய்த பிரதமர்: நரேந்திர மோடி பிரான்ஸுக்கு சென்றிருந்த போது விரைவில் யுபிஐ பரிமாற்ற செயல்முறை பிரான்ஸிலும் ஏற்கப்படும் அது புகழ்பெற்ற ஈஃபிள் டவரில் இருந்து தொடங்கும் என இந்தியர்கள் மத்தியில் உரையாடும் போது குறிப்பிட்டார். அது தற்போது நிறைவேறியுள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங் காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி அரேபியா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் , இந்தியாவில் வைத்திருக்கும் வங்கி கணக்கு மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால் யுபிஐ மூலம் பணம் அனுப்பலாம் மற்றும் பெற்றுக் கொள்ளலாம் என கூறியது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *