விரைவில் கூகுள் பே மூலம் உலகம் முழுவதும் UPI பேமெண்ட் வசதி! புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

கூகுள் இந்தியா நிறுவனம் இந்திய பேமெண்ட் கார்ப்பரேஷனின் (NPCI) துணை நிறுவனமான என்.பி.சி.ஐ. உடன் UPI சேவையை விரிடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. தற்போது இந்தியாவுக்குள் மட்டும் கிடைக்கும் இந்த சேவை வெளிநாடுகளிலும் கிடைப்பதற்கான முயற்சியை கூகுள் முன்னெடுத்துள்ளது.

கூகுள் இந்தியா மற்றும் என்பிசிஐ இடையே கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியே செல்லும் பயணிகள் UPI பேமெண்ட் வசதியை பயன்படுத்தும் வாய்ப்பை அளிப்பது, மற்ற நாடுகளில் UPI போன்ற டிஜிட்டல் பேமெண்ட் முறைகளை நிறுவுவதற்கு உதவுவது மற்றும் UPI மூலம் நாடுகளுக்கு இடையே பணம் அனுப்பவதை எளிதாக்குதல் ஆகிய மூன்று நோக்கங்களை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.

இவை UPI சேவையை உலகளாவிய பேமெண்ட் வழிமுறையாக மாற்றுவதற்கு உதவும். வெளிநாட்டு வணிகர்கள் இந்திய வாடிக்கையாளர்களுடன் எளிமையாக பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாய்ப்பையும் வழங்கும். இனி வெளிநாட்டு நாணயம் அல்லது கிரெடிட் அல்லது ஃபாரெக்ஸ் கார்டுகளை மட்டுமே பயன்படுத்தி பணம் செலுத்தவேண்டிய தேவை இருக்காது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், வழக்கமான பணப்பரிவர்த்தனை வழிமுறைகளைச் சார்ந்திருப்பதை குறைக்கும். இதன் மூலம் பணம் அனுப்புவதை எளிதாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.

இதுபற்றி கூகுள் பே இந்தியாவின் இயக்குனர் தீக்‌ஷா கௌஷல் கூறுகையில், “சர்வதேச சந்தைகளுக்கு UPIயின் வரம்பை விரிவுபடுத்துவதற்காக NIPL ஆதரவு தெரிவிப்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எளிமையாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் பணம் செலுத்தும் சேவையை அளிக்க உறுதியாக இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL) சி.இ.ஓ. ரித்தேஷ் சுக்லா கூறுகையில், “UPI ஐ உலக அரங்கில் கொண்டு செல்ல Google Pay உடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது இந்தியலப் பயணிகளுக்கான வெளிநாட்டு பரிவர்த்தனைகளை எளிமையாக்குவது மட்டுமல்லாமல், வெற்றிகரமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சுற்றுச்சூழலை மற்ற நாடுகளுக்கு விரிவுபடுத்தவும் உதவும்” என்கிறார்.

UPI இன் உலகளாவிய விரிவாக்கமானது சர்வதேச வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க நகர்வாக இருக்கும். இது உலகெங்கிலும் உள்ள வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற, பாதுகாப்பான மற்றும் செலவு குறைந்த பேமெண்ட் வழிமுறையாக இருக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *