அமெரிக்க அதிபர் தேர்தல் | குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்வில் ட்ரம்ப் வெற்றி: நிக்கி, விவேக் ராமசாமிக்கு பின்னடைவு

2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய அயோவா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று தடம் பதித்துள்ளார். ஐயோவா மாகாணத்தில் நடந்த வாக்குப்பதிவிக் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் என்றால் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள்தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இந்த ஆண்டு (2024) அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. முன்னாள் அதிபர் ட்ரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹேலி, தொழிலதிபா் விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இதில் அயோவா தேர்தலில் வெற்றிக் கணக்கைத் துவக்கியுள்ளார் ட்ரம்ப்.

வாக்கு சதவீதம்: அயோவா தேர்தலில் 51.9 சதவீத வாக்குகளுடன் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ப்ளோரிடா ஆளுநர் ரான் டேசாண்டிஸ் 20.7 சதவீத வாக்குகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறார். தெற்கு கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி 19 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். விவேக் ராமசாமி 7.7 சதவீத வாக்குகளும், அர்கான்ஸஸ் முன்னாள் ஆளுநர் அஸா ஹட்ஷின்சன் 0.2 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.

51 வயதாகும் நிக்கி ஹேலி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரின் தந்தை அஜித் சிங் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர். முதலில் கனடாவில் குடியேறிய அஜித் சிங் அதன்பின் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் வசித்து வந்துள்ளனர். இதே தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக தனது 39 வயதில் பதவியேற்று அமெரிக்காவின் இளம் ஆளுநர் என்ற சாதனையை கடந்த 2011ல் படைத்தார் நிக்கி ஹேலே. இரு முறை இம்மாகாண சிறப்பாக செயல்பட்ட நிக்கி, டிரம்ப் அதிபராக இருந்தபோது 2017 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரை ஐநா சபைக்கான அமெரிக்க பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளார்.

மற்றொரு வேட்பாளரான விவேக் ராமசாமியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவருக்கு 38 வயதாகிறது. ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் பட்டம்பெற்ற அவர், தற்போது தொழில்முனைவோராக உள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *