உஷாரய்யா உஷாரு… பங்குச் சந்தையில் இப்படி மோசடிகள் நடக்க கூடும்!

டெபிட் கார்டு தொடங்கி போன் பே வரை மோசடிகள் நடந்துக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் பங்குச்சந்தை மோசடிகள் குறித்து சொல்லவே வேண்டாம்.

பங்குச்சந்தையில் என்ன மோசடிகள் நடக்கிறது? உஷாராக இருப்பது எப்படி? என்பதை கூறுகிறார் நிதி ஆலோசகர் சுந்தரி ஜெகதீசன்.

பங்குச் சந்தை எவ்வளவு அதிக லாபம் தருகிறதோ, அதே அளவிற்கு ரிஸ்கும் உள்ளது…மோசடிகள் மற்றும் பிரச்னைகளும் உள்ளது. பங்குச் சந்தையில் மூன்று நிலைகளில் மோசடிகள் நடந்து வருகிறது.

முதல் நிலை:

‘இதில் முதலீடு செய்யலாம்…அதில் முதலீடு செய்யலாம்’ என்று தொடர்ந்து போன்கால்கள் மூலம் பங்குச்சந்தை குறித்த ஏகப்பட்ட டிப்ஸ்கள் கொடுக்கப்படும். செபியால் அங்கீகரிக்கப்படாதவர்கள் கூட பங்குச்சந்தை குறித்த வகுப்புகள் எடுப்பார்கள். அதன்மூலம் நம்மை பங்குசந்தையில் அதிகம் ஈடுப்பட வைப்பார்கள். ஒருகட்டத்தில் உங்களுக்காக நாங்களே பங்குகளை வாங்கி விற்கிறோம் என்று நமது நிதி தகவல்களை தெரிந்துக்கொண்டு, கடன் கொடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வைத்து, அதில் அவர்கள் அதிக லாபம் பெறுவார்கள்.

இரண்டாம் நிலை:

‘பம்ப் அன்ட் டம்ப் (Pump and Dump) டெக்னிக் மூலம் ஒரு குறிப்பிட்ட பங்கை மோசடி நபர்களே அதிகம் வாங்கி, மக்கள் அந்த பங்கை வாங்கியதுப்போல காட்டுவார்கள். அதை நம்பி அந்த பங்குகளை நாம் வாங்கும்போது சிக்கலில் மாட்டிக்கொள்வோம்.

மேலும் ‘அதிக லாபம் பெறலாம்’ என்று ஃபாரெக்ஸ் டிரேடிங், இன்ட்ரா டே டிரேடிங், ஆயில் டிரேடிங் ஆகிய வர்த்தகங்களில் நம்மை தள்ளிவிடும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. இந்த வர்த்தகங்கள் மிக ஆபாத்தானவை’ என்று ஜெரோதாவின் நிறுவனர் நித்தின் காமத் கூறுகிறார்.

மூன்றாம் நிலை

இதை ‘மேனேஜ்மென்ட் குவாலிட்டி’ என்று கூறுவார்கள். சிலர் புதியதாக ஒரு நிறுவனம் தொடங்கி, அது ஐபிஓ-க்குள் செல்லும் வரை நன்றாக செயல்படுவதுப்போல காட்டுவார்கள். ஐபிஓக்குள் சென்று மக்கள் பங்குகளை வாங்க தொடங்கியப்பின், அந்த நிறுவனத்தின் பங்குகளை அவர்கள் 30-35 சதவீதம் மட்டும் வைத்துக்கொண்டு ஏனோ தானோ என்று செயல்படுவார்கள். இதற்கு முன்பே இவர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துவிடுவார்கள். இதனால் முதலீடு செய்யும் மக்களுக்கு தான் நஷ்டம்.

இன்னொரு பக்கம் சில பெரிய நிறுவனங்கள் தங்களுக்கான சம்பளம் என பெரிய தொகையை எடுத்துக்கொண்டு முதலீட்டாளர்களுக்கு குறைவான லாபம் செல்வதுப்போல வைத்துக்கொள்வார்கள்.

இப்படி பங்குச்சந்தையில் மோசடிகள் நடப்பதால் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இதனால் புதியதாக பங்குச்சந்தைக்குள் வருபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பங்குச் சந்தையில் உஷாராக இருக்க சில டிப்ஸ்கள் இதோ…

ஒரு பங்கு நன்றாக சென்றுக்கொண்டிருக்கும் வேளையில் அந்த நிறுவனத்தினர் அவர்களின் பங்கையும் விற்றார்கள் எனில், எதற்காக விற்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்டு வாங்குவது நல்லது.

மார்ஜின் டிரேடிங் என்று சொல்லக்கூடிய கடன் வாங்கி வணிகம் செய்யும் முறையை தவிர்க்கவும்.

பங்குச் சந்தையை இரண்டாம் வருமானமாக வைத்துக்கொள்ளலாமே தவிர, இதை நம்பி இளைஞர்கள் வேலையை விட்டுவிடக் கூடாது.

ஒரேடியாக பங்குகளை வாங்கி குவிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட்டை தெரிந்துக்கொண்டு பங்குகளை வாங்குங்கள்.

பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடாமல் முதலீடு செய்யுங்கள்.

‘இவர் வாங்குகிறார்…அவர் வாங்குகிறார்’ என்றில்லாமல், நன்றாக தெரிந்தால் மட்டுமே ஒரு பங்கை வாங்குங்கள். பிறரை நம்பி வாங்கும்போது ‘அவர் எப்போது விற்றார்’ என்று தெரியாமல் சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *