வடிவேலு நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்.. மிஸ் செய்த விஜய், அஜித்.. என்ன காரணம் தெரியுமா?
வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2, மாரீசன் என்று பிஸியாக நடித்துவருகிறார் வடிவேலு.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு உழைத்துக்கொண்டே இருந்தார் அவர்.
ஆரோக்கியமான வளர்ச்சி: குறிப்பாக, தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.
வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை செய்து காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும், பஞ்சாயத்துக்களாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
சுராஜ் கூட்டணி: ஒருவழியாக பஞ்சாயத்துக்கள் தீர்த்து வைக்கப்பட்டு சுராஜ் இயக்கிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். படம் ஒர்க் அவுட் ஆகவில்லை. தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 படங்களில் நடித்த அவர் இப்போது மாரீசன் படத்தில் நடிக்கிறார். சுராஜுடன் வடிவேலுவுக்கு எப்போதுமே நல்ல வேவ் லெங்த் இருக்கும். இருவர் கூட்டணியில் வெளியான கிரி, தலைநகரம், மருதமலை உள்ளிட்ட படங்களின் காமெடி காட்சிகள் இன்றுவரை எவர்க்ரீன்.
மிஸ் செய்த விஜய், அஜித்: இந்நிலையில் மருதமலை திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் சுராஜ் சமீபத்திய பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் அளித்த பேட்டியில், “மருதமலை படத்தின் கதையை விஜய்க்குதான் முதலில் சொன்னேன். முழு கதையையும் கேட்ட அவர், நீங்க இந்தப் படம் பண்ணுங்கனு சொல்லி அட்வான்ஸ் கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார். மேலும் அந்தப் படத்தை சொந்தமாகவே தயாரிக்கவும் நினைத்தார். கதையை கேட்டு ரொம்பவே மகிழ்ச்சியடைந்துவிட்டார் விஜய்.
சச்சின்: மருதமலை படத்தை விஜய்யை வைத்து இயக்குவதற்காக நான் வெயிட்டிங்கில் இருந்தபோது தயாரிபாளர் தாணுவுக்கு சச்சின் என்ற ஒரு படத்தை விஜய் பண்ணிக்கொடுத்தார். அப்போது என்னிடம் வந்து, நான் ஒரு காதல் கதையில் நடிக்கப்போகிறேன். அந்தப் படத்தை முடித்துவிட்டு உங்களை கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். நானும் சரி ஒன்றும் பிரச்னை இல்லை என்று கூறிவிட்டேன். இதனையடுத்து தலைநகரம் படம் வெளியாகி ஹிட்டாகிவிட்டது. படம் ரிலீஸான இரண்டு மூன்று நாட்களில் மோகன் நட்ராஜ் அழைத்து அஜித்திடம் சொல்ல ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்டார்.
அஜித்திடமும் சொன்னேன்: விஜய்யிடம் சொன்ன மருதமலை கதையை அஜித்திடமும் சொன்னேன். முழு கதையையும் கேட்டுவிட்டு கொஞ்சம் யோசித்தார். காரணம் என்னவென்றால் அப்போதுதான் அஜித் போலீஸாக நடிக்கும் கிரீடம் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தது. எனவே மீண்டும் போலீஸ் ரோல் செய்ய வேண்டுமா என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. அதனையடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன் கதையை கேட்டு உங்களுக்கு எந்த ஹீரோ வேண்டும் என்று கேட்க; நான் அர்ஜுன் என்று சொன்னேன். அப்படித்தான் மருதமலை திரைப்படம் உருவானது” என்றார்.