Vaikunda Ekadasi: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்த பண்டரிநாதர்
கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்த பண்டரிநாதர்.
கரூர் நகரப் பகுதியான பண்டரிநாதன் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ரகுமாய் தாயார் உடனுறை பண்டரிநாதன் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு பல்வேறு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த பண்டரி நாதனுக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த பண்டரிநாதர் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் தொடர்ச்சியாக ஆலயம் மண்டபத்தில் சுவாமியை கொழுவிருக்க செய்தனர். பின்னர் அனைத்து ஆன்மீக பக்தர்களும் பரமபத வாசல் வழியாக வலம் வந்த பிறகு சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
குளித்தலை நீலமேகப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு. திரளான பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.
கரூர் மாவட்டம் குளித்தலையில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேலாக பராந்தக சோழன், வீரபாண்டியன் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட நீலமேகப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டன.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நீலமேகப் பெருமாள் உற்சவர், நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் ராமானுஜர் ஆகிய உற்சவர்களுடன் சொர்க்க வாசலை கடந்த பின்னர் திரளான பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என்ற நாமம் முழங்க சொர்க்க வாசலை கடந்து வந்தனர். பின்னர் மண்டபத்தில் எழுந்தருளிய நீலமேகப் பெருமாள் உற்சவருக்கு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலையே ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அதேபோல் குளித்தலை வைகநல்லூர் அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பிலும் தயாராக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.