வந்தாச்சு பொங்கல் பண்டிகை.. ஒரே நாளில் சென்னையில் இருந்து இத்தனை லட்சம் பேர் பயணமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் தாம்பரம் மெப்ஸ் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்கலுக்கு முந்தைய இரண்டு நாட்களான இன்றும், நாளையும் சனி மற்றும் ஞாயிறு என்பதால் நேற்றே பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால், பேருந்து நிலையங்களில் கடும் நெரிசல் காணப்பட்டது.
கிளாம்பாக்கத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், ஏராளமான முன்பதிவு செய்யாத பயணிகள் வந்ததால் பேருந்துகள் இல்லமல் அவதியடைந்தனர்.
இதனிடையே, நேற்று மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் ஆயிரத்து 260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 ஆயிரத்து 946 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.