160கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த வந்தே பாரத்.. சிவப்பு சிக்னலை கண்டதும் தானே நின்ற அதிசயம்! சோதனையோட்டம் வெற்றி

இந்தியன் ரயில்வேஸ் பயணிகளுக்கு பாதுகாப்பான ரயில் பயண அனுபவத்தை வழங்கும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே உச்சபட்ச வேகத்தில் இயங்கினாலும் வந்தே பாரத் ரயிலை சிக்னலுக்கு ஏற்ப வேகத்தைக் குறைத்து தானாக செயல்படச் செய்யும் பணியில் களமிறங்கி இருக்கின்றனர்.

இந்தியர்கள் மத்தியில் வந்தே பாரத் ரயில் சேவைக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. அதி நவீன வசதிகள் தாங்கிய ஓர் ரயிலே வந்தே பாரத் ரயில்கள் ஆகும். இதனையே தற்போது அதிக பாதுகாப்பான ரயில்களாக மற்றும் முயற்சியில் இந்தியன் ரயில்வேஸ் களமிறங்கி இருக்கின்றது. இதுகுறித்து செய்யப்பட்ட சோதனையோட்டமே தற்போது வெற்றியைக் கண்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆக்ரா ரயில்வே பிரிவு சமீபத்தில் எட்டு பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயிலில் ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டத்தைப் பொருத்தி அது செயல்படும் விதம் குறித்து சோதனையோட்டம் செய்தது. இந்த சோதனையோட்டமே தற்போது வெற்றியடைந்திருக்கின்றது. கவச் எனும் மோதலை தவிர்க்கும் தொழில்நுட்பத்தின் வாயிலாகவே இந்த வசதியை வந்தே பாரத் ரயிலுக்கு வழங்கி இருக்கின்றனர்.

இந்த சோதனையோட்டத்தில் ரயில் சுமார் 10 மீட்டர் இடைவெளிக்கு முன்னரே சிவப்பு சிக்னலைப் பார்த்ததும் வேகத்தை குறைத்து பாதுகாப்பான முறையில் நின்றிருக்கின்றது, வந்தே பாரத் ரயில். நிற்பதற்கு முன்னதாக அந்த ரயில் மணிக்கு சுமார் 160 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு இருக்கின்றது.

இத்தகைய வேகத்தில் சென்ற போதிலும் சிவப்பு சிக்னல் போடப்பட்டு இருப்பதை உணர்ந்து கவச் சிஸ்டம் ரயிலை பாதுகாப்பான முறையில் நிறுத்தி இருக்கின்றது. லோகோ பைலட்டின் எந்தவொரு தலையீடும் இல்லாமலேயே இத்தகைய செயலை அது செய்திருக்கின்றது என்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த சோதனையோட்டம் வெற்றி அடைந்திருப்பதால் தற்போது கவச் சிஸ்டத்தை அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் இன்ஸ்டால் செய்ய இந்தியன் ரயில்வேஸ் திட்டமிட்டு இருக்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அன்றே இந்த சோதனையோட்டம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுவே கவச் சிஸ்டம் வந்தே பாரத் ரயிலில் இன்ஸ்டால் செய்து சோதனையோட்டம் செய்யப்படுவது முதல் முறையாகும்.

கவச் தொழில்நுட்பம் ரயில்களில் பொருத்தப்படுவது மட்டுமல்லாமல் அந்த ரயில் இயங்கும் ரயில் நிலைய வழித் தடங்களிலும் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த பணியிலேயே இந்தியன் ரயில்வேஸ் தற்போது தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. அதாவது அனைத்து ரயில் போக்குவரத்து வழித்தடங்களிலும் கவச் தொழில்நுட்பத்தை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

8 பெட்டி வந்தே ரயில்களைத் தொடர்ந்து 16 கார்களைக் கொண்ட வந்தே பாரத் ரயில்களிலும் விரைவில் இந்த சோதனையோட்டம் செய்யப்பட இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்து இருக்கின்றது. தற்போது ஆக்ரா வழி தடம் முழுவதிலும் கவச் அம்சம் பொருத்தப்பட்டுவிட்டது. 80 கிமீ நீளத்திற்கு கவச் பொருத்தப்பட்டு உள்ளது.

மதுரா மற்றும் பல்வல் பகுதி முழுக்க கவச் சேர்க்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆகையால் இனி வரும் நாட்களில் இந்த ரூட்களில் எந்தவொரு ரயில் விபத்தும் அரங்கேறாது என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்று ரயில் விபத்தே இல்லாத நிலையை உருவாக்கும் பொருட்டே இந்தியன் ரயில்வேஸ் கவச் சிஸ்டத்தை நாடு முழுவதிலும் உள்ள ரயில் வழித்தடங்களில் பொருத்தும் பணியை தொடங்கி இருக்கின்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *