Vayilar Nayanar: ஆண்டவனை மனதில் கொண்டு வழிபாடு செய்த நாயனாரின் கதை!

பெருமைக்கும்,மதிப்பிற்குமுரிய, ஐயா கம்பவாரிதி, இலங்கை ஜெயராஜ் அவர்கள்,தமது மேலான, சொற்பொழிவைத் தொடங்கும் போது,மிகவும் பணிவுடன்,தாம், மனம், மொழி,மெய்களால் இறை வணக்கம் செய்வதாகச் சொல்லியே பேச்சைத் தொடர்வார். இதிலிருந்து, இறை வழிபாடு என்பது மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காண்கிறோம்.

இதில் மெய் என்பது உடலால் வழிபடுவது. மொழி என்பது,இறைவன் நாமங்களை ,அவர் பெருமைகளை,மகிமை அனைத்தையும் பாடுவது, மனம் என்பது,மனதினால் மானசீகமாக,இறைவனை வழிபடுவது. வாயிலார் நாயனார் என்பவர்,இந்த மூன்றாவது வழியை,மிக அனுபவித்து,ஆண்டவனை மனதிலிருத்தி, இறை வழிபாடு செய்திட்ட, ஒரு புகழ் பெற்ற நாயனார்‌.

தமிழ்நாட்டின் கடற்கரை நகரமும்,வங்காள விரிகுடாக் கடலின் மிக அருகில் அமைந்துள்ளதும், தமிழ்நாட்டின் முக்கிய கலை,மதம்,கலாச்சார மையமாகவும் உள்ள,பழமையான குடியிருப்புகளைக் கொண்டிருக்கும் இடமும், சிவபெருமானுக்கு அருகில் மயில் வடிவில், பார்வதி தேவி பிரகாசமாக தவத்தில் நின்றிருக்கும் தலமுமான சென்னை மயிலாப்பூரில் அவதரித்தவர் இவர்.

“தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்(று)அல்லார் அவம் செய்வார் ஆசையுள் பட்டு” என்கிறது குறள்.

இப்படி,பக்தியை, தவமாக செய்தவர் வாயிலார் நாயனார்.

“உன்னால் சாதிக்க இயலாத காரியமென்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே”

என்பார் விவேகானந்தர். இந்த வரிகளுக்கு மிகவும் பொருத்தமானவர் நமது வாயிலார் நாயனார். தன்னம்பிக்கை மிகவும் கொண்டு,வழிபட்டு ,இறை நிலை அடைந்தவர்.

இறைவனை அடைந்து நன்மை பெறுவதற்கு வாயிலாக அதாவது வழியாக உள்ளவர் என பொருள் கூறி, வாயிலார் என்பது, சேக்கிழார் எனும் குடிப் பெயராக இருக்கக் கூடும் எனவும், தான் எனும் அகந்தை எழாத அருந்தன்மை உள்ளவர் எனவும் விளக்கம் சொல்லுவார்கள்.

தனது மனக்கோவிலில் சிவபெருமானை எழுந்து அருளச்செய்து,அவரை, உணருகின்ற ஞானம் எனும் சுடர் விளக்கை ஏற்றி,பேரானந்தம் எனும் திருமஞ்சனமாட்டி, அன்பெனும் திருவமுதையமைத்து, அர்ச்சனை செய்து,ஞான பூஜையை, ஆராத அன்பினால் நாள் தவறாது செய்து வந்தார்‌. கருவறை தனிலமைந்த லிங்கத்தை, கற்பக விருட்ச மலர்கள் அலங்கரித்தது கண்டு, ஆனந்தப் பரவசமெய்தினர்.

“துறைக் கொண்ட செம்பவளம்

இருளகற்றும் சோதி

தொன்மயிலை வாயிலார் அடியார்க்கு அடியேன்”

என போற்றுவார் சுந்தரர்.

திரு நாவுக்கரசர், திருஞானசம்பந்தர் காலத்திற்கும், சுந்தரர் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவரிவர் என்பார்கள் பெரியோர்.

“மறவாமையானமைந்த

மனக்கோயிலுள் இருத்தி”

எனவும்

“அகமலர்ந்த அர்ச்சனையில்

அன்னார் தமைநாளும்

நிகழவரும் அன்பினால்…”

என போற்றுவார் சேக்கிழார் பெருமான்.

இவரது வரலாறு பத்து பாடல்களில் சுருக்கமாகக் கூறப் பட்டாலும், மனம் எனும் அரங்கத்தில், இறை வினை ஏற்றி, மானசீகமாக, பூஜை செய்து, தியானம் சிறந்தது எனும் கொள்கை கோட்பாட்டை காண்பித்து,

“எத்தோநின் அன்புடமை

எல்லோரும் அறியாமோ

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை” அதாவது, அழகான இதயம் உடையவர்கள்,சிவனை நெஞ்சில் நிறுத்திப் பாடாமல் இருப்பரோ”எனும் திருவெம்பாவை வரிகள் இவரின் வாழ்வின் வரிகளைக் காட்டி நிற்கும்.

“பற்றுக பற்றற்றான்

பற்றினை அப்பற்றை

பற்றுக பற்றுவிடற்கு”

எனும் குறள் வரிகளுக்கு ஒப்ப, அன்பினால் இறை, திருப்பாதத்தை இறுகப்பற்றியவரிவர். இவருக்குத் திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில், முருகப் பெருமான் சன்னதிக்கு அடுத்து சன்னதி உண்டு.

“எம் பெருமான் மெய்யே

உன் பொன் அடிகள் கண்டு

இன்று வீடு உற்றேன்”

என்னுமாப்போல, இவர், மனதுக்குள்ளே, இருதய சுத்தியுடன், பேரன்புடன், சிறப்பான அகப் பூஜை செய்து, சிவபெருமானை வழிபட்டு, இறுதியில், சிவ பெருமானின் திருவடி நிழலை அடைந்தார். இவர் அவதார தலமும், முக்தி தலமும் திருமயிலையே. மார்கழி மாதம், ரேவதி நட்சத்திரத்தில், இவருக்கான, குருபூஜை, வருடாவருடம் சிறப்பாக நடக்கின்றது. நாயனாரின் இறை பக்தியின் மேன்மை. தவத்தை மனதில் நிலை நிறுத்தி, அவரை வணங்கி வாழ்த்து பெறுவோம்.

-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார், சென்னை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *