Vengaivayal incident : ’ஓராண்டை கடந்த வேங்கைவயல் சம்பவம்!’ முதல்வரை விளாசும் அண்ணாமலை!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நடந்து ஓராண்டை கடந்துள்ள நிலையில் இதுவரை குற்றவாளிகள் யாரையும் அரசு கண்டுபிடிக்காதது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் ட்வீட் செய்துள்ள அவர், வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே. இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூக நீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் உங்கள் உண்மை முகம் அம்பலப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. பொதுமக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே பார்க்கும் திமுகவின் கோரமுகம் முழுவதுமாக வெளிப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது.
தமிழகத்தில், 30% பள்ளிகளில், பட்டியல் சமூக மாணவர்களுக்கு எதிராக ஜாதிய வேற்றுமை, தீண்டாமை நிலவுகிறது என்று, நாளிதழ் செய்தி ஒன்று வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், இன்னும் மேடைகளில், சமத்துவம் சமூக நீதி என்றெல்லாம், யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் உங்கள் முகத்திற்கு நேராகவே சிரிக்கிறார்கள்.
வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது முதலமைச்சர் @mkstalin அவர்களே. இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூக நீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் உங்கள் உண்மை முகம் அம்பலப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. பொதுமக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே பார்க்கும் திமுகவின்…
— K.Annamalai (@annamalai_k) December 26, 2023
இத்தனை ஆண்டுகளாக, மத்திய அரசு பட்டியல் சமூக மக்கள் நலனுக்காக ஒதுக்கும் நிதியை எடுத்து, உங்கள் வாக்கு அரசியலுக்காக வேறு திட்டங்களுக்குச் செலவிட்டீர்கள் அல்லது செலவே செய்யாமல் திருப்பி அனுப்பினீர்கள். பொதுமக்களுக்கு அதன் வீரியம் புரியவில்லை. காலாகாலமாக நீங்கள் நடித்து வரும் மேடை நாடகங்களை நம்பியிருந்தார்கள் ஆனால், இனியும் அவர்கள் ஏமாறத் தயார் இல்லை என தெரிவித்துள்ளார்.