ரொம்ப ஓவர்.. சீனியர்கள் பேச்சை மதிக்காத மும்பை இந்தியன்ஸ் வீரர்.. இனி டீமுக்குள் நுழைவதே கஷ்டம்
இந்திய அணியில் கடந்த ஓராண்டாக இடம் பெற்று வந்த இஷான் கிஷன் தற்போது அணி நிர்வாகத்தின் பேச்சைக் கேட்காமல் அணியில் இருந்து ஓரங்கட்டப்படும் நிலைக்கு சென்று இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக ஆடி வந்த இஷான் கிஷன் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று, கடந்த 2௦22 ஆம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார். அதன் பின் அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்று வந்தார். ஆனால், அவருக்கு போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு சில சமயங்களில் மட்டுமே கிடைத்தது.
2023ஆம் ஆண்டு மட்டும் அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆசிய கோப்பை, 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, ஆஸ்திரேலிய டி20 தொடர், தென்னாப்பிரிக்க டி20 தொடர் என தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்று வந்தார். ஆனால், அவர் அதில் ஆடிய போட்டிகள் மிகவும் குறைவு தான்.
இந்த நிலையில், தனக்கு போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், அவர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து தாமாக விலகினார். அவர் மன சோர்வின் காரணமாக விலகி இருப்பதாக பிசிசிஐ தெரிவித்தது. அவர் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறுவார் என கூறப்பட்ட நிலையில் அது சந்தேகமாக மாறி உள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறிய அறிவுரைகளை கேட்கவில்லை என்பதே அதற்கு காரணம் என கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் மற்றும் அதற்கு முந்தைய இந்தியா ஏ பயிற்சிப் போட்டிகளில் இருந்து இஷான் கிஷன் விலகிய நிலையில், அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் முன் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் ஒரு போட்டியில் பங்கேற்க வேண்டும் என இந்திய அணி சார்பில் கூறப்பட்டு இருக்கிறது.
ஆனால், அதை அவர் இதுவரை செய்யவில்லை. ஜார்கண்ட் மாநில வீரரான இஷான் கிஷன் இதுவரை ஜார்கண்ட் அணியை தொடர்பு கொள்ளவில்லை. அந்த மாநில கிரிக்கெட் அமைப்பு அதை உறுதிப்படுத்தி உள்ளது. இஷான் கிஷன் தனக்கு தொடர்ந்து அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் மனமுடைந்து இவ்வாறு நடந்து கொள்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.