Vettaiyan – வேட்டையன் ரஜினி கேரக்டரில் இருக்கும் சஸ்பென்ஸ் இதுவா?.. அட செம மேட்டரா இருக்கே
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அப்படம் வசூல் ரீதியாகவும் செம ரெஸ்பான்ஸை பெற்று உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். படத்தை ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கிவருகிறார்.
ரஜினிகாந்த்துக்கென்று இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சாமானியர்களிலிருந்து செலிபிரிட்டிகள்வரை ரஜினியின் தாக்கம் இல்லாமல் இல்லை. அந்த அளவுக்கு தன்னுடைய ஸ்டைல், நடிப்பு என அனைத்திலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். சினிமாவுக்கு யார் நடிக்க வந்தாலும் ரஜினியை போல் ஆக வேண்டும் என்றுதான் உள்ளே வருவார்கள். அதேபோல் இப்போது உச்சத்தில் இருக்கும் விஜய், அஜித் போன்றோரும்கூட சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு ஆசைப்பட்டது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சறுக்கல்: ரஜினிகாந்த் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவரது படங்கள் அசால்ட்டாக நூறு கோடி ரூபாய் வசூலை ஈட்டிக்கொண்டிருந்தன. இடையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்ததோடு மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தன. மேலும் அந்த இரண்டு படங்களின் தோல்வி காரணமாக ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலியும் ஆட்டம் காண ஆரம்பித்தது.
கம்பேக் கொடுத்த ஜெயிலர்: சூழல் இப்படி இருக்க இளம் இயக்குநரான நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார் ரஜினிகாந்த். கடந்த வருடம் வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டானது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. ரஜினிகாந்த்தின் நடிப்பு, நெல்சனின் மேக்கிங் என அத்தனையுமே க்ளிக் ஆனதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர். இதன் காரணமாக ரஜினிகாந்த் தரமான கம்பேக் கொடுத்துவிட்டதாக அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
வேட்டையன்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இரண்டு படங்களில் அவர் கமிட்டானார். ஒன்று லால் சலாம். இன்னொன்று வேட்டையன். தனது மகள் இயக்கியிருக்கும் லால் சலாம் படம் கடந்த ஒன்பதாம் தேதி வெளியாகி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. அடுத்ததாக ஜெய்பீம் படத்தை இயக்கி பெரும் கவனம் ஈர்த்த த.செ.ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் தற்போது ஆந்திராவில் நடந்துவருகிறது. இதில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
ரஜினியின் கேரக்டர்: படத்தின் கதை குறித்து பல்வேறு தகவல்கள் யூகங்களாக சொல்லப்படுகின்றன. அதன்படி 1980ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த போலி என்கவுண்ட்டரை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கிவருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெய்பீம் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்தது. எனவே இந்தப் படமும் அது போல் தரமான படமாக அமையும் என ரஜினி ரசிகர்கள் நம்புகின்றனர். அதேசமயம் டைட்டில் டீசரை பார்க்கையில் படம் கமர்ஷியலாகவும் இருக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது.
இந்நிலையில் படத்தில் ரஜினியின் கேரக்டர் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இதில் அவர் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதில் ஒரு சஸ்பென்ஸாக போலி என்கவுண்ட்டருக்கு எதிராக களமாடுபவராகவும்; சக காவல் துறை அதிகாரியுடனேயே பலமாக மோதும் அளவுக்கு அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். ரஜினிகாந்த் எத்தனையோ போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கண்டிப்பாக இந்த கேரக்டர் அவருக்கு வித்தியாசமாக அமையும் என்று கூறுகிறார்கள் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள்.