பொங்கல் ரேஸில் வெற்றி… அயலான் டீம் உடன் கோவை பட்டீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு வயதினரையும் கவர்ந்துள்ளதால், இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு ஊராக நேரில் பட குழுவினுடன் சிவகார்த்திகேயன் பார்வையிட்டு வருகிறார். அதன்படி கோவை வந்த அவர், இன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் பட குழுவினரும் கோவிலுக்கு வந்திருந்தனர்.
கோவிலில் வழிபட்ட பின்னர் வெளியில் வந்த நடிகர் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். இதனையடுத்து அவருடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிவகார்த்திகேயனுடன் கைகுலுக்கி பொதுமக்கள் பொங்கல் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இதையடுத்து அங்கிருந்து காரில் கிளம்பி சென்றார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக எஸ்.கே.21 திரைப்படம் தயாராகி வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.