ராமாயண கதாபாத்திரத்தை நிராகரித்த விஜய் சேதுபதி
சினிமா இந்தியாவில் நுழைந்த காலகட்டத்தில் புராண, இதிகாசங்கள் அதிகளவில் திரைப்படங்களாயின. பிறகு சமூக திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்த, புராண, இதிகாசங்கள் ஓரங்கட்டப்பட்டு, உள்ளூர் கடவுள்களை மையப்படுத்தி ஆடிவெள்ளி, அம்மன் போன்ற படங்கள் வர ஆரம்பித்தன. பிறகு அவையும் அருகிப்போய், ஆவி, பேய் கதைகள் கடவுள்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டன.
சமீபமாக மீண்டும் புராண, இதிகாசங்களை பிரமாண்டமாக தூசுதட்ட ஆரம்பித்துள்ளனர். புராண, இதிகாசங்களை அப்படியே திரையில் கொண்டு வருவது, புராண, இதிகாச கதாபாத்திரங்களை இந்த காலகட்டத்திற்கேற்ப மாற்றி நவீன வடிவில் காட்டுவது என இருவழிகளில் இந்த தூசி தட்டுதல் நடந்து வருகிறது.
ராமாயணத்தை மையப்படுத்தி பிரமாண்டமாக எடுத்த ஆதிபுருஷ் மோசமான திரைக்கதை மற்றும் சிஜியால் படுதோல்வியடைந்தது. ஆனாலும், ராமாயணத்தை படமாக்கும் முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தங்கல் படத்தை இயக்கிய நிதீஷ் திவாரி, ராமாயணத்தை படமாக்கும் முயற்சியில் உள்ளார். இதில் ராமனாக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் விபீஷணன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகியுள்ளனர்.
விபீஷணன் இராவணனின் சகோதரன். அவன் சீதையை கவர்ந்து வந்ததால், அவனிடம் கோபித்து ராமனை சரணடைவான் விபீஷணன். நியாயத்தின் பக்கம் நின்ற விபீஷணனைவிட, செஞ்சோற்றுக் கடனுக்காக அண்ணன் இராவணனின் பக்கம் நின்று உயிர் துறந்த கும்பகர்ணனே இன்றும் உயர்வாக மதிக்கப்படுகிறான். முதுகில் குத்துகிறவர்களை குறிப்பிடவே விபீஷணன் பெயர் பயன்படுத்தப்படுகிறது.
இனிமேல் வில்லனாக நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ள விஜய் சேதுபதி, விபீஷணன் வேடத்தில் நடிக்க மறுத்துள்ளார். இதனால், இந்தி நடிகர் ஹர்மன் பவேஜாவை விபிஷணன் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.