விஜய் ஷேகர் ஷர்மா திடீர் பதவி விலகல்.. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் என்ன நடக்கிறது..?
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் கடந்த ஒரு மாதமாக கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் இருந்து non-executive chairman பதவியில் இருந்தும், நிர்வாக குழுவில் இருந்தும் பேடிஎம் நிறுவனர் விஜய் ஷேகர் ஷர்மா விலகியுள்ளார்.
ரிசர்வ் வங்கி முன் வெளியிட்ட அறிவிப்பின் படி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனத்திடம் மார்ச் 15ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்டு கருவிகள், வேலெட், ஃபாஸ்டேக் மற்றும் தேசிய பொது போக்குவரத்து அட்டைகளில் பணம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் பேடிஎம் நிறுவனம், மூன்றாம் தரப்பு பயன்பாட்டு வழங்குநராக மாறுவதற்கான கோரிக்கையை ஆய்வு செய்யுமாறு தேசிய கட்டண தீர்வு நிறுவனத்திடம் (NPCI) ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம், நான்கு முதல் ஐந்து வங்கிகள் பேடிஎம் நிறுவனத்திற்கு சேவை வழங்குபவர்களாக செயல்பட முடியும்.
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய UPI கட்டண செயல்பாட்டு நிறுவனமான பேடிஎம், அதன் UPI பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதற்காக ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யெஸ் வங்கி ஆகிய வங்கிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள இருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வங்கி கூட்டாளிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, மேலும் பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை தடையின்றி கையாளும் தொழில்நுட்ப திறன் கொண்ட பெரிய வங்கிகளுடன் இந்த செயல்முறையைத் தொடங்க பேடிஎம் விரும்புகிறது என்றும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
பேடிஎம் பேமென்ட் வங்கியின் வாடிக்கையாளர்கள் பணத்தை டெபாசிட் செய்யவும், கடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுவதற்கான காலக்கெடுவை மார்ச் 15 வரை நீட்டித்துள்ளது சில நாட்களுக்கு முன்பு தான் அதிகரித்தது. இதற்கு முன்பு பிப்ரவரி 29 ஆம் தேதியை கடைசி நாளாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தனது விசாரணைக்கான பணிகளைச் செய்து வரும் வேளையில், நிதியமைச்சக பிரிவான FIU போடிஎம் வெறும் டிரைலர் தான், அடுத்தடுத்து சிக்கப்போகும் பேமெண்ட் வங்கிகளைப் பாருங்கள் எனப் புதிய குண்டை தூக்கிப்போட்டு உள்ளது.
KYC வெரிஃபிகேஷன் இல்லாமல் சுமார் 50,000 கணக்குகள் செயல்பாட்டில் உள்ளதாக நிதி நுண்ணறிவு பிரிவு (FIU) கண்டறிந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்தக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.