‘11 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் ஆர்வம் காட்டாத விஜய்…’ – கவனம்பெறும் பழைய வீடியோ..

11 ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் விஜய் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது கவனம் பெற்றுள்ளது. விஜய் அதிரடியாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அவர் முன்பு பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வர தொடங்கியுள்ளன.

திரைத்துறை மூலம் மக்களின் கவனத்தை பெறக்கூடிய நடிகர்கள் அடுத்த கட்டமாக அரசியல் கட்சியை தொடங்குவது அல்லது அரசியல் கட்சியில் இணைவது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் சரத்குமார், விஜயகாந்த், கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். இவர்களில் எம்ஜிஆர் முதலமைச்சராகி மறைந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கட்சியை தொடங்க மாட்டேன் என்று அறிவித்து நீண்டகால எதிர்பார்ப்புகளை முடிவுக்கு கொண்டு வந்தார். இதற்கிடையே விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக பல நல பணிகளை மக்கள் மத்தியில் செய்து கொண்டிருந்தார்.

சமீபத்தில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நிவாரண பணிகளை மேற்கொண்டிருந்தனர். திருநெல்வேலி மாவட்டத்திற்கு நேரில் சென்ற விஜய் அங்கு தனது மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண பொருட்களை பொது மக்களிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக நின்று வழங்கினார். அவ்வப்போது அவரது பனையூர் அலுவலகத்தில் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பான கூட்டங்கள் கடந்த சில வாரங்களாக நடந்து வந்தன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக விஜய் அரசியல் கட்சியை அறிவிக்க போகிறார் என்று தகவல்கள் வெளிவந்தது. நேற்று முன்தினம் வெளியான தகவலின் படி, விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் விஜய் தனது கட்சியை அறிவித்தார். இதற்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 11 ஆண்டுகளுக்கு முன்பாக நேர்காணல் ஒன்றில் பேட்டி எடுத்த விஜய் தனக்கு அரசியலில் அவ்வளவு ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் தனக்கு அரசியலில் இன்ட்ரஸ்ட் இல்லை என்றும், தான் எங்கேயும் அரசியலுக்கு வரப்போவதாக அறிவிக்கவில்லை. ஒரு சில ஊடகங்கள் நான் அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்கள். அதை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருகிறது என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

நடிகர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தான் ஒப்புக்கொண்ட இன்னொரு படத்தில் நடித்து முடித்துவிட்டு, முழுவதுமாக அரசியலில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளார். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *