விஜய பிரபாகரன் எனக்கும் மகன்தான்.., சின்ன பையன் நல்லா இருக்கணும்! ராதிகா சரத்குமார் கருத்து
விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் எனக்கும் மகன் தான் என்று போட்டி வேட்பாளர் குறித்து ராதிகா சரத்குமார் பேசியுள்ளார்.
விருதுநகர் தொகுதி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 -ம் திகதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
தற்போது விருதுநகர் மக்களவை தொகுதி விஐபி தொகுதியாக மாறிவிட்டது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார்.
பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும், அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் விருதுநகரில் களமிறங்குகின்றனர்.
ராதிகா சரத்குமார் பேட்டி
இந்நிலையில் இன்று சிவகாசி கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட ராதிகா சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “விருதுநகர் மக்களவை தொகுதியில் நல்ல விடயங்கள் செய்ய நிறைய உள்ளது. அங்கு, மாணிக்கம் தாகூரின் செயல்பாடு குறைவாக உள்ளது. விருதுநகர் பட்டாசு தொழிலாளர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும்.
விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் எனது மகளுடன் படித்த பையன். எனக்கும் ஒரு மகன் மாதிரி தான். சின்ன பையன் நன்றாக இருக்க வேண்டும்.
இந்த மக்களவை தேர்தலில் நாடு நமக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் பார்க்க வேண்டும். நல்ல திட்டங்கள் தீட்டப்பட வேண்டும், வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்றார்.