மறுவெளியீட்டில் கமல், ரஜினி படங்களுக்கு போட்டியாக வெளியாகும் விஜய் படம்
சமீபகாலமாக பழைய படங்களை மறுவெளியீடு (ரி-ரிலீஸ்) செய்து வருகின்றனர். இந்தப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் மறுவெளியீடு ஒரு ட்ரெண்டாக மாறி வருகிறது.
மறுவெளியீட்டில் சாதனை நாயகன் என்றால் அது சிவாஜி கணேசன். அவரது வசந்த மாளிகை, கர்ணன், தெய்வமகன் உள்பட பல படங்கள் பலமுறை மறுவெளியீடு கண்டுள்ளன. அப்படி மறுவெளியீடு செய்யும் போதெல்லாம் இந்தப் படங்கள் லாபம் சம்பாதித்துள்ளன. எம்ஜி ராமச்சந்திரனின் ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன் உள்பட சில படங்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
சமீபத்தில் ரஜினியின் பாபா படத்தை டிஜிட்டலில் ஒலி, ஒளி மேம்படுத்தி வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து கமலின் வேட்டையாடு விளையாடு படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. தனுஷின் 3, மயக்கம் என்ன படங்களுக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு யாரும் எதிர்பார்க்காதது. கமலின் ஆளவந்தான் படமும் மறுவெளியீட்டில் இளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
பெரிய படங்கள் வெளியாகாத போது பழைய படங்களை இதுபோல் வெளியிடுவது திரையரங்குகளுக்கு லாபம் தரும் விஷயமாக உள்ளது. புதுப்படங்களைவிட அதிக ஷேர் மறுவெளியீடு படங்களுக்கு திரையரங்குகளுக்கு தரப்படுகிறது. தற்போது வாரணம் ஆயிரம், வல்லவன் திரைப்படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளன. விஜய் படமும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கிறது.
விஜய்யின் சினிமா கரியரில் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது துப்பாக்கி. அதற்கு முன், அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்த படம் என்றால் அது கில்லி. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு படத்தை தரணி கில்லி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார். ஒக்கடு கிளைமாக்ஸில் ஒரு பாடல் இடம்பெறும். கில்லியில் அதனை தவிர்த்து கிளைமாக்ஸை கச்சிதமாக செதுக்கியிருந்தார் தரணி. த்ரிஷாவின் வெளந்ந்தித்தனம், பிரகாஷ்ராஜின் வில்லத்தனம், வித்யாசாகரின் இசையும், பாடல்களும் கில்லியை ஆல்டைம் பேவரைட் படமாக்கின.
2004 இல் வெளியான கில்லியை இளையதலைமுறையில் பலருக்கும் திரையரங்கில் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும்விதமாக விரைவில் கில்லி படத்தை மறுவெளியீடு செய்ய உள்ளனர். புதுப்படம் போல கில்லி திரையரங்கை அமர்க்களப்படுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. விஜய் ரசிகர்களும் அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.