ஐஏஎஸ் அகாடமியில் மாணவிகளிடம் அத்துமீறல்… உரிமையாளர் அதிரடி கைது!
ஐ**.ஏ.எஸ்.** அகாடமி உரிமையாளர் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில் ஐஏஎஸ் அகாடமி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி வருபவர் சீதாராம் பாளையத்தை சேர்ந்த 30 வயதான அஸ்வின் என்கிற மெய்யழகன். இவரது அகாடமியில் படித்த மற்றும் படித்து வரும் 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இவர் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல பெண்களிடம் இவர் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதனை வைத்து மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், வெங்கடேசன் என்பவரது மகள் அர்த்தநாரீஸ்வரர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்து வந்தார். அவரிடம் அத்துமீற முயன்ற நிலையில் அந்த பெண் அகாடமியிலிருந்து நின்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அஸ்வின் அந்த பெண் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்துள்ளார். அவரது நடத்தை குறித்தும், ஒழுக்கம் குறித்தும் அவதூறாக பேசி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் தந்தை அவரை நேரில் சந்தித்து, இதுகுறித்து கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். அத்துடன், பெண்ணின் தந்தையை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அஸ்வினை பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அஸ்வினின் செல்ஃபோனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதில் ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும், பெண்களிடம் போனில் பேசிய பதிவுகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவரின் தந்தை திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் அஸ்வின் மீது புகார் கொடுத்தார்.
அதன்பேரில் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி சுரேஷ்பாபு, அஸ்வினை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில், திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் முழுமையாக விசாரணை நடத்தினால் மட்டுமே எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பது குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.