பாதுகாப்பு விதிமுறைகள் மீறல்: ஏர் இந்தியாவுக்கு ரூ.1.1 கோடி அபராதம்
புதுடெல்லி: பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்துக்கு ரூ.1.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சில நீண்ட வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்கள் தொடர்பாக பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.1 கோடி அபராதம் விதித்துள்ளதாக விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான டிஜிசிஏ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஜிசிஏ நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏர் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் விமானங்களின் பாதுகாப்பு மீறல்கள் குறித்து விமான ஊழியர் ஒருவர் கூறிய புகாரைத் தொடர்ந்து விரிவான ஒழுங்குமுறை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட விசாரணைக்கு ஏர்இந்தியா நிறுவனம் ஒத்துழைக்கவில்லை என்பதால் அந்நிறுவனத்துக்கு டிஜிசிஏ அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த பாதுகாப்பு அறிக்கையானது ஏர் இந்தியா நிறுவனத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்களின் பாதுகாப்புடனும் தொடர்புடையதாகும்.
குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தின் செயல்பாடுகள் ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு ஏற்றதாக இல்லை என்பதாலும், ஏர் இந்தியா விமான நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கி நடக்காததாலும் டிஜிசிஏ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.1 கோடி அபராதத்தை டிஜிசிஏ விதித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது ஒரே வாரத்தில் இது இரண்டாவது முறையாகும். முன்னதாக,முறையான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் விமானச் சேவைகள் தாமதமடைந்ததாகக் கூறி, விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான டிஜிசிஏ கடந்த 18-ம் தேதி அந்நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.