14 வயசுல விராட் கோலியை பார்த்து வெறி வந்தது.. அந்த நிமிடத்தை என்றும் மறக்க மாட்டேன்.. சுப்மன் கில்!

2022-23 ஆண்டுக்கான சிறந்த இந்திய கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றுள்ள சுப்மன் கில், சிறு வயதில் ஐசிசி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நினைவுகள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த தலைமுறைக்கான நட்சத்திர வீரராக உயர்ந்து வருகிறார் சுப்மன் கில். அதற்கேற்ப டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் படைத்து வரும் சாதனைகள் அனைவரையும் வியக்க வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் 5 சதங்கள், 9 அரைசதங்கள் என்று வேற லெவலில் ஃபார்மில் இருந்தார். 2 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை விளாசியுள்ள சுப்மன் கில், 2022-23 சீசனுக்கான சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் என்ற விருதை வென்று அசத்தியுள்ளார். இந்த விருதினை சுப்மன் கில் முதல்முறையாக வென்றுள்ளார். இதனால் விருது விழாவில் அவர் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

இதனிடையே சொந்த காரணங்களால் விராட் கோலி இந்த விருது விழாவில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் விராட் கோலி குறித்து சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில், பிசிசிஐ விருது விழாவில் பங்கேற்றதன் மூலம் ஏராளமான நினைவுகள் வருகின்றன. 14 வயதிருக்கும் போது முதல்முறையாக பிசிசிஐ விருது விழாவில் கலந்து கொண்டேன். அப்போது தான் எனது குரு-கள், ஜாம்பவான்களை முதல்முறையாக நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது விராட் கோலி சிறந்த கிரிக்கெட்டருக்கான விருதை வென்றிருந்தார். அது என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத நினைவாக இருக்கும். அந்த நிமிடம் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது. எனது திறமைகளை கூடுதலாக வெளிப்படுத்தி நாட்டுக்காக கோப்பைகளை வெல்ல வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்ததாக பதிவிட்டுள்ளார். அதேபோல் இளம் வீரராக இருந்த போது, விராட் கோலியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

விராட் கோலியின் தீவிர ரசிகரான சுப்மன் கில், இந்திய அணியின் அடுத்த ரன் மெஷினாக உருவாகி வருகிறார். கடந்த சில போட்டிகளாக சொதப்பி வரும் சுப்மன் கில்லுக்கு, இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கம்பேக் தொடராக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சுப்மன் கில் தீவிரமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *