ஒரே நாளில் ஜெர்மனி முழுக்க பிரபலமான விராட் கோலி.. ட்விட்டர் அட்மின் செய்த வேலை.. என்ன நடந்தது?
மும்பை : ஒரே நாளில் ஜெர்மனி மற்றும் தீவிர கால்பந்து ஆடும் ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் விராட் கோலி பிரபலமாகி இருக்கிறார். முன்னணி கால்பந்து கிளப்பான ஜெர்மனியின் பெயர்ன் மியூனிச் கால்பந்து கிளப்பின் ட்விட்டர் நிர்வாகி செய்த ஒரு வேலை தான் அதற்கு காரணம்.
முன்பு கிரிக்கெட் உலகிலேயே பிரபலமான வீரராக இருந்த விராட் கோலி, இன்று கிரிக்கெட்டை உலகம் முழுவதும் பிரபலமாக்கும் வீரராக மாறி இருக்கிறார். குறிப்பாக சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் பிரபலமான கால்பந்து வீரர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கைக்கு இணையாக விராட் கோலியும் ரசிகர்களை வைத்துள்ளார்.
இந்த நிலையில் ட்விட்டரில், “உலகின் வெவ்வேறு விளையாட்டுக்களில் பிரபலமான வீரர்கள் தங்கள் விளையாட்டை மாற்றிக் கொண்டு ஆடினாலும் சரி சமமாக இருப்பார்கள் என்றால் எந்த இரு வீரர்களை சொல்வீர்கள்?” என ஒரு நிறுவனம் வேடிக்கையாக கேட்ட கேள்விக்கு பெயர்ன் மியூனிச் அணியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில் பதிவிடப்பட்டு இருந்தது.
பெயர்ன் மியூனிச் அணியின் கோல் கீப்பர் மானுவல் நியூயர் மற்றும் விராட் கோலி என அந்த அணி பதில் அளித்து இருந்தது. அந்த பதிவு அடுத்த சில நிமிடங்களில் ட்விட்டரில் அதிகமாக பகிரப்பட்டது. சில மணி நேரங்களில் சுமார் 15 லட்சம் பேரால் பார்க்கப்பட்டது. ஜெர்மனி ஊடகங்களிலும் அந்த ஒப்பீடு குறித்து செய்திகள் வெளியாகின.
இதனால், ஒரே நாளில் விராட் கோலி ஜெர்மனியின் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக மாறினார். தங்கள் அணியின் ட்விட்டர் பதிவு உலகம் முழுவதும் பெரிதாக பேசப்பட்ட நிலையில் பெயர்ன் மியூனிச் ஒரு விஷயத்தை உடைத்தது. அதாவது அந்த பதிவை பதிவிட்ட ட்விட்டர் நிர்வாகி தீவிர விராட் கோலி ரசிகர் என்ற உண்மையை போட்டு உடைத்து ஒரு பதிவை வெளியிட்டது. அதில் தாமஸ் எனும் அந்த நிர்வாகி இந்திய கிரிக்கெட் அணியின் உடையை அணிந்து இருந்தார்.