விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு! ஒரு நாள் வருமானம் மட்டும் இவ்வளவா?
Virat Kohli Net Worth: விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் அழிக்க முடியாத ஒரு பெயராக உருவெடுத்துள்ளார். தோனிக்கு அடுத்தபடியாக அதிக செல்வாக்கு மிக்க வீரராக உள்ளார் விராட் கோலி. அவரது புகழ் கிரிக்கெட் இருக்கும் வரை அழியாமல் இருக்கும். U19 உலக கோப்பை தொடங்கி கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை வரை பல சாதனைகளை புரிந்துள்ளார். கோலி ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 13,800 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார், மேலும் டெஸ்ட் போட்டிகளில் 8,800 ரன்களை கடந்துள்ளார். கிரிக்கெட்டை தாண்டியும் பலதரப்பு ரசிகர்களை வைத்துள்ளார் விராட் கோலி. குறிப்பாக அவரது பிட்னஸ் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
ரசிகர்களால் ‘கிங் கோலி’ என்று அழைக்கப்படும் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 260 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களையும், X தளத்தில் 61.4 மில்லியன் பாலோவர்ஸ்களையும் கொண்டுள்ளார். விராட் கோலி தொட்டதெல்லாம் பணமாக அவருக்கு மாறுகிறது. பல வகைகளில் அவருக்கு வருமானம் வந்து கொண்டு இருக்கிறது. இது அவரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவராக மாற்றியுள்ளது. தற்போது விராட் கோலியின் முதலீடுகள் மற்றும் வருமானங்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
விராட் கோலியின் முதன்மையான வருமான ஆதாரம் கிரிக்கெட் மூலம் அவர் வாங்கும் சம்பளம் ஆகும். அதன் பிறகு விளம்பரங்களில் நடிப்பது, சமூக ஊடக ஒப்புதல்கள், பிராண்ட் ஒப்பந்தம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடுகள் மூலம் வருமானம் பெறுகிறார். ப்ளூ ட்ரைப், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ், எம்பிஎல் மற்றும் ஸ்போர்ட்ஸ் கான்வோ போன்ற ஸ்டார்ட்அப்களில் விராட் கோலி முதலீடு செய்துள்ளார். மேலும் கோலிக்கு குருகிராமில் சுமார் ரூ. 80 கோடியில் பங்களாவும், மும்பையில் ரூ. 34 கோடி மதிப்புள்ள பிளாட்டும் உள்ளது. இவை தவிர ரியல் எஸ்டேட்டில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியன் சூப்பர் லீக் கிளப் எஃப்சி கோவா, டென்னிஸ் கிளப் மற்றும் மல்யுத்த ஆதரவு அணி ஆகியவற்றிலும் விராட் கோலி தனது கால்தடத்தை பதித்துள்ளார். இது மற்ற விளையாட்டு வீரர்களிடம் இருந்து அவரை தனித்து காட்டுகிறது. ஒன்8 எனப்படும் பூமாவுடன் அவர் தனது சொந்த லைஃப்ஸ்டைல் பிராண்டையும் வைத்துள்ளார். மேலும் விராட் கோலிக்கு சொந்தமான உணவகங்களும் டெல்லியில் உள்ளன. விராட் கோலியின் நிகர மதிப்பு சுமார்1,000 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் அவரது வருமானம் 33.9 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் ரூ. 250 கோடியாக இருந்தது, இது அவரை அதிக சம்பளம் வாங்கும் இந்திய விளையாட்டு வீரராக மாற்றியது.
பிசிசிஐ ஒப்பந்தத்தின்படி, A+ பிரிவின் கீழ் இருக்கும் விராட் கோலி ஆண்டுக்கு ரூ. 7 கோடி சம்பளமாக பெறுகிறது. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு ரூ. 15 லட்சமும், ஒவ்வொரு ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், ஒரு டி20 போட்டியில் விளையாடுவதற்கு ரூ. 3 லட்சமும் போட்டி கட்டணமாக பெறுகிறார். மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணியில் விளையாடுவதற்கு அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 15 கோடி பெறுகிறார்.