விருதுநகர்: `அரசைத் தவிர, உதவிக்கு யாரும் இல்லை…’ – தொப்புள்கொடி உறவுகளைக் காக்கப் போராடும் அக்கா!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா கோசுக்குண்டு அருகே முத்தார்பட்டியில் தாய்-தந்தையை இழந்து நான்கு பிள்ளைகள் தனியே ஆதரவுக்கு யாருமின்றி தினசரி தேவைகளுக்காக அவதிப்படுகிறார்கள் என்ற தகவல், நமக்கு கிடைத்தது.
அதன் அடிப்படையில் முத்தார்பட்டிக்கு நேரில் சென்று விசாரித்தோம். வழிநெடுகிலும் கரிசல்காடாய் விரிந்து கிடந்த அந்த நிலத்தில், சின்னதாய் தென்பட்ட ஊர் முத்தார்பட்டி. கிடைத்த தகவல்கள் எல்லாம் அந்த ஊரில் குறிப்பிட்ட ஒரு வீட்டை மட்டும் கைக்காட்டின. அடையாளம் காட்டப்பட்ட அந்த வீட்டில் மொத்தம் நான்கு பிள்ளைகள். மூத்தவள் ஒச்சம்மாள் (வயது 20), தங்கை கார்த்திகா தேவி (14), அதற்கடுத்து கருப்பசாமி (11), கடைக்குட்டிப் பிள்ளையாய் பெரிய கருப்பசாமி (9). பள்ளிக் கல்வியைக்கூட சரியாக முடிக்காத பருவ வயதினர், அந்தப் பழைய வீட்டுக்குள் ஈரமான சுவற்றைப் பற்றிக்கொண்டபடி உறங்கிக் கொண்டிருந்தனர்.
இடிந்த வீடு
அயலார் வந்திருக்கும் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தார் ஒச்சம்மாள். பஞ்சடைத்த கண்கள், பரட்டை தலை, நைந்துபோன துணியில் மேலாடை, மெலிந்த தேகம், சோர்வான முகம், பலமற்ற கால்கள் என பரிதாப தோற்றத்தில் வந்து நின்றார் அவர். தாய், தந்தையை இழந்த பின்பு, தன் தங்கை, தம்பிகளைக் காப்பாற்ற சுற்றியிருக்கும் எல்லா பிரச்னைகளையும் சமாளித்து, உடன்பிறந்தவர்களுக்கு ஒளி கொடுக்கும் தேவதையாக தெரிந்தார் ஒச்சம்மாள். வயதுக்கு மீறிய குடும்ப பாரத்தால் ஏற்கெனவே பாதி கரைந்துவிட்ட அவர், தம்பி-தங்கைகளை கரைசேர்க்க யாரேனும் உதவுவார்களா என்ற ஏக்கத்தில் திளைத்திருந்ததை அறியமுடிந்தது. மனம் முழுக்க குழப்பமும், கவலைகளும் நிறைந்த அவரால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை.
உடல் மூச்சறைகளில் மிச்சமிருக்கும் மொத்த ஆற்றலையும் ஒன்றுதிரட்டி பேசுவதுபோல நம்மிடம் பேசினார் ஒச்சம்மாள். “என்னுடைய அப்பா ஒச்சான். அம்மா மெய்யக்காள். 2019-ல் அம்மா உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். அதன் பிறகு அப்பா கூலி வேலைக்குச் சென்று எங்களைக் காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் 2021-ல் அப்பாவும் இறந்துவிட, என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை. அப்பா உயிரோடு இருந்த வரைக்கும், நான் எந்த வேலைக்கும் சென்றதில்லை. இறப்பிற்கு முன்பாக அப்பா, உடல்நலம் இல்லாமல் படுத்தப் படுக்கையான நிலையில் இருந்தார். அதனால், குடும்ப வருமானத்துக்காக நான் படிப்பை உதறிவிட்டு, கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் காட்டு வேலைகளுக்குச் சென்று கிடைத்தப் பணத்தைக் கொண்டு வந்து சோறாக்கி சாப்பிட்டு வந்தோம். பின்பு, அப்பா இறந்ததும் அந்த சொற்ப வருமானத்துக்கும் வழியில்லாமல் போய்விட்டது. அக்கம் பக்கத்தினர் பரிதாபப்பட்டு ஓரிரு நாள்கள் உணவளித்து உதவினார்கள்.