விருதுநகர்: ஆட்சியர் எனத் தெரியாமல் உரையாடிய மூதாட்டி; உண்மை தெரிந்ததும் நடந்தது என்ன தெரியுமா?
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார்.
அப்போது நரிக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தினுள் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தை ஆய்வு செய்து விட்டுத் திரும்பியபோது மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவரிடம், ‘பாட்டி என்ன சிகிச்சைக்காக வந்தீர்கள்?’ என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கேட்டார்.
கேள்வி கேட்பது தூரத்து உறவினர் எவரோ என நினைத்த பாட்டி, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனின் கரம்பற்றிச் சிரித்துப் பேச ஆரம்பித்தார். வந்திருப்பது மாவட்ட ஆட்சியர் என்பதை அறியாமலே அவர் நீண்ட நேரம் உரையாடினார்.
பதிலுக்கு மாவட்ட ஆட்சியரும், அவருடன் உரையாட, ஒரு கட்டத்தில் “நான் யார் என்று தெரிகிறதா பாட்டி?” என வினவவும், லேசாகத் திகைத்த பாட்டியிடம், “நான்தான் கலெக்டர் வந்திருக்கேன் பாட்டி” எனத் தன்னை அறிமுகபடுத்திக் கொண்டார் ஆட்சியர் ஜெயசீலன்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி, “ஐயா, எனக்குக் கண்ணு சரியா தெரியலைய்யா… அதனால்தான் நீங்க யாருன்னு எனக்குத் தெரியாம போச்சுய்யா… எதுவும் நினைச்சுக்காதீங்க…” எனத் தழுதழுத்த குரலில் பேசினார். இதையடுத்து மூதாட்டியை ஆற்றுப்படுத்திய ஆட்சியர், “உங்களுக்கு என்ன உதவி வேணும் பாட்டி, நான் எதாவது செய்யனுமா?” எனக் கேட்கவும், “முதியோர் உதவித்தொகை கிடைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுய்யா…” கெஞ்சிய குரலில் கோரிக்கை வைத்தார் மூதாட்டி.
இதையடுத்து, அங்கு வந்திருந்த திருச்சுழி வட்டாட்சியரை அழைத்து, “மூதாட்டிக்கு உதவித்தொகை கிடைப்பதில் என்ன சிக்கல் உள்ளது. அதைத் தீர்ப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை ஆராய்ந்து விரைவில் மூதாட்டிக்கு உதவித்தொகை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுங்கள்” என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.
நரிக்குடி அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சுவாரஸ்ய சம்பவத்தையடுத்து, மூதாட்டியைச் சூழ்ந்த மக்கள் அவருக்கு வாழ்த்துகள் சொல்லி மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.