இந்தியாவில் 10,000+ கார்களை உற்பத்தி செய்து Volvo சாதனை!
பெங்களூரு: இந்தியாவில் 10,000+ கார்களை உற்பத்தி செய்து அசத்தியுள்ளது Volvo இந்தியா. அந்நிறுவனத்தின் 10,000-வது கார் பெங்களூருவில் உள்ள உற்பத்தி கூடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் தனது தயாரிப்பில் உருவாகும் அனைத்து கார்களையும் மின்சக்தியில் இயங்கும் வகையில் மாற்ற திட்டமிட்டுள்ளது வோல்வோ.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் பெங்களூருவில் கார்களை அசெம்பிள் செய்து வருகிறது வோல்வோ. எக்ஸ்சி90, எக்ஸ்சி60, எஸ்90, எக்ஸ்சி40 ரீசார்ஜ் மற்றும் சி40 ரீசார்ஜ் மாடல் கார்கள் இங்கு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் எக்ஸ்சி60 மாடல் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4,000 யூனிட் எக்ஸ்சி60 கார்கள் இதில் அடங்கும். இருந்தும் இந்தியாவில் வோல்வோவின் 10,000-மாவது காராக எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடல் உருவாகி உள்ளது. இதற்கு ‘மேக் இன் இந்தியா’ திட்டம் சிறந்த வகையில் பயன் அளித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
1927-ல் நிறுவப்பட்டது வோல்வோ நிறுவனம். ஸ்வீடன் நாட்டில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள உற்பத்தி கூடங்களின் மூலம் நான்கு சக்கர வாகனங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் கடந்த 2017 முதல் கார்களை தயாரித்து வருகிறது. இந்தியாவில் சொகுசு கார்களுக்கான சந்தையில் நிலையாக தடம் பதித்து வருகிறது இந்நிறுவனம்.