100 வயது வரை ஆரோக்கியமா வாழணுமா? அப்போ இந்த வைட்டமின்கள் முக்கியம்
பொதுவாகவே அனைவருக்கும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். வாழ வேண்டும் என்பதை விட முக்கியம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது தான்.
பல்வேறு நோய்களுடன் வாழும் போது வாழ்வே நரகமாகிவிடும். அந்த வகையில் ஆரோக்கியமாகவும் மகிழ்சியாகவும் வாழ விரும்பினால் நாம் முறையான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்ற வேண்டியது அவசியம்.
அது மட்டுமன்றி ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை தவிர்க்க வேண்டியதும் இன்றியமையாதது.
நாம் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமென்றால், மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, சீரான உடற்பயிற்சி, நல்ல தூக்கம், புகையிலை மற்றும் குடிப்பழக்கம் இல்லாமை, ஆரோக்கியமான எடையை பராமரித்தல் போன்றவை முக்கியத்துவம் பெருகின்றது.
அந்த வகையில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய வைட்டமின்கள் குறித்தும் அது எந்த உணவுகளில் நிறைந்து காணப்படுகின்றது என்பது தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
வைட்டமின் டி
சூரிய ஒளியில் செறிந்து காணப்படும் வைட்டமின் டி, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும் மிகவும் அவசியமாகின்றது.
உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இல்வாத பட்சத்தில் ஆட்டோ இம்முயூன் கோளாறுகள், புற்றுநோய் மற்றும் இதய நோய் என்பன ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கின்றது. இந்த வைட்டமினை போதியளவு பெற்றுக்கொள்ள உடலில் சூரிய வெளிச்சம் படுவது அவசியம்.
மேலும் கொழுப்பு நிறைந்த மீன்கள் மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்கள் மூலம் வைட்டமின் டி-யை பெற்றுக்கொள்ளலாம். வெயிலில் வளர்க்கப்படும் கோழிகளின் முட்டையிலும் வைட்டமின் டி அதிகளவில் காணப்படுகின்றது.
வைட்டமின் சி
ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நிறைந்த வைட்டமின் சி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மேலும் நம் உடலில் கொலஜன் உற்பத்தி செய்வதற்கும் காயங்களை விரைவில் குணப்படுத்தவும் உடல் இரும்புச்சத்தை உறிஞ்சவும் வைட்டமின் சி அவசியமாகின்றது.
வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான புற்றுநோய்கள், இதய நோய்கள் வராமல் தடுக்க முடிகின்றது.
ப்ரோகோலி, குடை மிளகாய், கிவி பழம், சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள் ஆகியவற்றில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகின்றது. நீண்ட நாட்கள் சருமத்தை இளமையாக வைத்திருப்பதற்கு வைட்டமின் சி மிகவும் அவசியம்.
வைட்டமின் இ
ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் அதிகமாக காணப்படும் வைட்டமின் இ, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்கின்றது.
வைட்டமின் இ நமது சருமத்தை ஆரோக்கியமாக்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
நட்ஸ், விதைகள், கீரைகள், காய்கறி எண்ணெய் மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்களில் வைட்டமின் இ அதிகளவில் காணப்படுகின்றது.
வைட்டமின் பி12
நரம்புகளின் செயல்பாடுகள் சீராக இருக்க வைட்டமின் பி12 அவசியம். வயதாகும் போது ரத்தத்தில் சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை குறை ஆரம்பிக்கும் இதனை சரிசெய்வதில் வைட்டமின் பி12 முக்கிய பங்கு வகிக்கின்றது.
ரத்தசோகை, இதய நோய்கள், அறிவாற்றல் குறைபாடு போன்ற ஆபத்துகள் வராமல் தற்காத்துக் கொள்ள வைட்டமின் பி12-யை போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
முட்டைகள், பால் பொருட்கள், இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்களில் வைட்டமின் பி12 நிறைந்து காணப்படுகின்றது.
சைவ உணவு மாத்திரம் சாப்பிடுபவர்களும் பால் பொருட்களை எடுத்துக்கொள்ள விரும்பாதவர்களும் மாத்திரை வடிவில் வைட்டமின் பி12யை எடுத்துக்கொள்ளலாம்.
வைட்டமின் கே2
இதய ஆரோக்கியம், எலும்புகள், ரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கு வைட்டமின் கே2 இன்றியமையாததாகும்.
சீஸ், முட்டையின் மஞ்சள் கரு, நொதித்த உணவுகள், புற்களில் வளர்க்கப்பட்ட விலங்கின் பொருட்களில் இந்த வைட்டமின் கே2 நிறைந்து காணப்படுகின்றது. எலும்புன் நீண்ட நாட்களுக்க உறுதியுடன் இருக்க இந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.