மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாமென எச்சரிக்கை
மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் (31.01.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டணம்
புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால், மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என நம்ப முடியாது.
இதற்கிடையில், இடைநிறுத்தப்பட்ட மின் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இலங்கை மின்சார கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உட்பட பல தொழிற்சங்கங்கள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்த நிலையில் அவர்களின் மகஜரை ஏற்க யாரும் முன்வரவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் பிரச்சினை
இதேவேளை, அரசியல் பிரச்சினை காரணமாக 8 வருடங்களின் பின்னர் மின்சார கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் வினைத்திறனை மேம்படுத்தும் தொனிப்பொருளில் நேற்று கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.