முதுமையில் மனச்சோர்வு விடுபடும் வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர்
முதுமையில் வதைக்கும் மனநோய்கள் பலவும் இப்போது 45- 50 வயதிலேயே ஆரம்பமாகிவிடுகின்றன.
முக்கியமாக மனச்சோர்வு, மனப்பதற்றம், மனக்குழப்பம் மற்றும் மறதிநோய் போன்றவை அதிகமாகி வருகின்றன. அதில், மனச்சோர்வு அதிக பாதிப்பினை தருகிறது. அதிலும், ஆண்களைவிட, பெண்களே அதிகம் மனச்சோர்வினால் பாதிக்கின்றனர் என்று கூறுகிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா. மன சோர்விலிருந்து விடுபடும் வழிகள் குறித்து அவர் நம்முடன் மேலும் பகிர்ந்து கொண்டவை:
இன்றைய வாழ்க்கைமுறை மிகுந்த மனச்சோர்வு தருவதாக இருக்கிறது. அதிலும், தனிக்குடித்தன வாழ்க்கைமுறையில் பெண்களுக்கு சுமைகள் அதிகமாகிவிட்டன. இல்லதரசியாக இருக்கும் பெண்களுக்குக் கணவரும் குழந்தைகளும் கிளம்பிப் போனபிறகு நாள் முழுக்கத் தனிமை வாட்டுகிறது. வேலைக்குப் போகும் பெண்களுக்கு இருமடங்கு வேலை பெருஞ்சுமையைத் தருகிறது. இவையெல்லாம் மனச்சோர்வை வரவழைக்கின்றன. தனியாக இருப்பவர்கள், திருமணம் செய்து கொள்ளாதவர்கள், கணவரை இழந்தவர்கள், குடும்பத்தின் அரவணைப்பு இல்லாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்தப் பாதிப்பு அதிகம் வரக்கூடும். மிக நெருங்கியவர்களின் மரணமும் மனச்சோர்வுக்குக் காரணமாக அமைகிறது.
இந்தியாவில் தற்கொலை செய்துகொள்வோரில் ஐந்தில் ஒருவர் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்தான். இதற்கு மனச்சோர்வு மற்றும் அழுத்தம் தரக்கூடிய வாழ்க்கை நிகழ்வுகள் என்று பலதரப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. நகர்ப்புறங்களைவிடக் கிராமங்களில்தான் அதிகம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்துகொள்வது, முன்னரே தற்கொலைக்கு முயன்றது, தற்கொலை பற்றி அதிகம் பேசுவது போன்ற இயல்புகள் கொண்டவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
எதிர்காலத்தில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகவே முதியோர்களின் தற்கொலைகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி, முதியோர்கள் பொது மருத்துவர்களையே முதலில் ஆலோசனைக்காக அணுகுவார்கள். எனவே, முதியோர்கள் தங்களுடைய மனவேதனையைக் கூறும்போது, அவர்களின் தற்கொலை எண்ணங்களை அறிய பொது மருத்துவர்களுக்கு மேலும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
மனச்சோர்வுக்காகச் சிகிச்சைக்குச் சென்றால் நம்மை மனநோயாளியாக நினைப்பார்கள் எனப் பயந்துகொண்டு நிறையபேர் சிகிச்சைக்குச் செல்வதில்லை. இன்னும் பலருக்கு தங்களுக்கு மனச்சோர்வு நோய் இருக்கிறது என்பதே தெரிவதில்லை. பெரும்பாலும் உறவினர்களே இவர்களை மருத்துவரிடம் அழைத்து வருகிறார்கள். இந்த நோயைக் கண்டறிய முதலில், உடலை முழுமையாகப் பரிசோதனை செய்ய வேண்டும். உடல் சார்ந்த நோய்கள் இருந்தால், அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
மனச்சோர்வை நீக்கத் தற்பொழுது பல மருந்துகள் வந்துள்ளன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பயன்கிடைக்கும். மருந்துகள் பயனளிக்காத நோயாளிகளுக்கு மின் சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க முடியும். எளிதான இந்தச் சிகிச்சையில் தீய விளைவுகள் ஏதுமில்லை.