ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கினால் பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு ஆதரவு தர நாங்க ரெடி..!
இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் நிறுவனம் ஆனது தொடர்ந்து பல்வேறு சிக்கலில் சிக்கி வருகிறது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேடிஎம் பேமென்ட் வங்கி மீதான தடை குறித்து மறுபரிசீலனை செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆக்சிஸ் வங்கி ஆனது புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், தற்போது ஆக்சிஸ் வங்கியின் தலைமைச் செயலதிகாரியான அமிதாப் சவுத்ரி பேடிஎம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, ரிசர்வ் வங்கி மீண்டும் ஒப்புதல் அளித்தால் பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக ஆக்சிஸ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. பேடிஎம் நிறுவனத்துடன் பணிபுரிய ரிசர்வ் வங்கி தங்களை அனுமதித்தால், நாங்கள் அவர்களுடன் (பேடிஎம்) இணைந்து பணியாற்றுவோம் என்று நிகழ்ச்சி ஒன்றில் சவுத்ரி கூறியுள்ளார்.பேடிஎம் நிறுவனம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 31ஆம் தேதி பேடிஎம் பேமெண்ட் வங்கி மீது ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பிப்ரவரி 29ஆம் தேதிக்குப் பிறகு வாடிக்கையாளர் கணக்குகள், வேலட்கள், ஃபாஸ்டாக், டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.