நாங்க சைபர் கிரைம் போலீஸ் பேசுறோம்… ஆபாசப் படம் பார்ப்பவர்களை குறிவைத்து பணம் பறிக்கும் மோசடி கும்பல்!
கோவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததற்கு அபராதம் விதிப்பதாக**,** போலீஸ் அதிகாரிகள் போல் பேசி பணம் பறித்த 9 பேர் கும்பலை சைபர் கிரைம் போலீசார் பிடித்துள்ளனர்**.**
நூதனமாக திருடுவது எப்படி என தேர்வு வைத்தால் அடிஷனல் ஷீட் வாங்கி 50 பக்கங்கள் எழுதி, நூற்றுக்கு இருநூறு மதிப்பெண்கள் வாங்கும் மோசடி நபர்கள் எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள். ரகம் ரகமாக யோசித்து சிக்கியவர்களிடம் எல்லாம் சில்லரையை ஆட்டைய போடும் அப்படி ஒரு கும்பல் தான். தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளது. ஆபாச படம் பார்த்ததாக பயம் காட்டி, ஆளைக் கவுக்கும் கும்பல் சிக்கியுள்ளது.
ஒருவரிடம் பணம் பறிக்க வேண்டுமானால் அவரை தொடர்பு கொள்ள வேண்டும். அதற்கு சிறந்த வழி செல்போன் மட்டுமே. அந்த செல்போன் நம்பரை எப்படி எடுப்பது, என யோசித்த கும்பலுக்கு ஆன்லைன் கூகுள் மேப் கை கொடுத்துள்ளது. அதில் தான் கடைகள், நிறுவனங்கள் என போட்டோக்களை வரிசை கட்டி இலவசமாக விளம்பரப்படுத்தி இருப்பார்கள். அதிலிருந்து பெயர் பலகைகளில் உள்ள செல்போன் எண்களை எடுத்து வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டு கைவரிசை காட்டியுள்ளது.
இந்த நூதன மோசடிக் கும்பல் ஹலோ காவல்நிலையத்தில் இருந்து பேசுகிறோம் என மரியாதையாக ஆரம்பிக்கும். அடுத்து தான் தங்கள் வேலையையே காண்பிப்பார்கள். அதென்ன நள்ளிரவு 2 மணிக்கு ஆபாச படம் பார்த்திருக்கிறீர்கள். எங்களுக்கு சைபர் கிரைமில் இருந்து புகார் வந்திருக்கிறது என லேசாக கொக்கி போடுவார்கள். எதிர்முனையில் குரலில் சற்று தடுமாற்றம் தெரிந்தால் போதும் அந்த நபர் இனி தங்கள் அடிமை என்ற முடிவிற்கு வரும். பின்னர், அந்த கும்பல் வரிசை கட்டி மிரட்ட ஆரம்பிப்பார்கள். ஹலோ நான் எஸ்.ஐ. பேசுகிறேன்… ஹலோ நான் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன்… ஹலோ நான் போலீஸ் ஏட்டு பேசுகிறேன் என அடுத்தடுத்து போன் செய்து அலற விடும் கும்பல், கடைசியாக வழக்கிலிருந்து தப்பிக்க சில்லரையை வெட்டுங்கள் என பேரம் பேசுவார்கள். அதற்கும் மசியாத நபர்களிடம், நடமாடும் கோர்ட் நீதிபதி அருகில் இருப்பதாகவும், உடனடியாக தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அபராத தொகையை செலுத்த வேண்டும் என்றும் கூறி மிரட்டுவார்கள். விட்டால் போதும் என வெதும்பும் அந்த நபரிடம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பில் போட்டு வங்கிக் கணக்கு மூலமாக வசூல் செய்து விடும் அந்த மோசடி கும்பல். நிதானமாக யோசித்த பின் தான் பணத்தை இழந்தவர்களுக்கு அது மோசடிக் கும்பலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழும்.
இவ்வாறு பணத்தை இழந்த பலரும், ஒரு கும்பல் மிரட்டி பணம் பறிப்பதாக கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு அடையாளத்தை காட்டாமல் தகவல் கொடுத்துள்ளனர். விழித்துக் கொண்ட கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்திய போது சற்று வியந்து போயினர். அந்த மோசடி கும்பல் செல்போனில் பேசும் போது சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என்று நம்ப வைப்பதற்காக வேறொரு செல்போனில், போலீசாரின் வயர்லஸ் மைக் ஒலி பின்னணியில் வரும் வகையில் செட்டப் செய்து ஏமாற்றியுள்ளனர்.
உண்மையிலேயே போலீஸ் அதிகாரிதான் பேசுவதாக நினைத்து பலரும் பணத்தை கொடுத்து இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது . தீவிர தேடுதல் வேட்டையில் 9 பேர் வரை போலிசாரிடம் சிக்கினர். அவர்களில் 5 பேர் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. பிடிபட்ட இந்த 5 கல்லூரி மாணவர்களும் பாதியிலேயே படிப்பை கைவிட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. பிடிபட்ட 9 பேர் மீதும் வாக்கு பதிவு செய்த போலீசார் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வந்து புகார் செய்யுமாறு அறிவித்துள்ளனர்.
இதில் கைதான சபரி என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சைபர் கிரைம் போலீசார், நடமாடும் நீதிமன்ற கதை கூறி, ஆபாச படம் பார்ப்பவர்களை குறி வைத்து, மிரட்டி பணம் பறித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.