“தேர்தலுக்கு இந்த 4 பிரிவுகளை மனதில் வைத்து வேலைசெய்ய வேண்டும்!” – மோடி சொன்ன வியூகம் என்ன?
`இந்தியா’ என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கிய போது, போட்டி போட்டுக்கொண்டு அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய பா.ஜ.க, 2024 தேர்தலுக்கான அரையிறுதி ஆட்டமாகப் பார்க்கப்பட்ட ஐந்து மாநில தேர்தலில் மூன்றில் வெற்றி பெற்றபிறகு, பாதி கிணற்றைத் தாண்டியதுபோல் கூடுதல் நம்பிக்கையோடு ஆலோசனைக் கூட்டங்களை சத்தமில்லாமல் நடத்திவருகிறது.
டிசம்பர் 19-ம் தேதி இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடத்திய போதுகூட, எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 140-க்கும் மேற்பட்டோரை குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்துவிட்டு, எதிர்க்கட்சிகள் எம்.பி-க்களே இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றிக்கொண்டிருந்தது பா.ஜ.க.
தேசிய ஜனநாயக கூட்டணி Vs I.N.D.I.A
இந்தியா கூட்டணியும் தற்போது அடுத்தகட்டமாக, சீட் பகிர்வு குறித்து கலந்தாலோசிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் எந்தெந்த மாதிரியான வேலைகளில் ஈடுபடவேண்டும், எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பா.ஜ.க நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியிருக்கிறார்.
ஜே.பி.நட்டா தலைமையில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். இதில் மோடி, “ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என நான்கு பிரிவுகளை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
நம் திட்டங்கள் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் சரியான முறையில் சென்றடைந்தால், அது நமக்கு உதவும். மேலும், பா.ஜ.க-வுக்கு ஆதரவான வாக்குகளை அதிகரிக்க, பூத் கமிட்டியில் கவனம் செலுத்த வேண்டும். அமைப்பு பலத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும், எனவே, முழுமையாகத் தயாரான பிறகே மக்களிடம் செல்ல வேண்டும்” என பா.ஜ.க நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன.