அஸ்வினுடைய குணம் என்னன்னு அன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டோம்.. ரோஹித் சர்மா ஓபன் டாக்
இந்திய அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இடையே இரண்டாம் நாள் ஆட்டத்துடன் போட்டியில் இருந்து விலகினார். அவரது தாயை மருத்துவமனையில் சேர்த்ததை அடுத்து அவர் உடனடியாக போட்டி நடந்த ராஜ்கோட் மைதானத்தில் இருந்து கிளம்பி சென்னை வந்தார்.
அதன் பின் மீண்டும் நான்காம் நாள் இறுதியில் அவர் மீண்டும் அணியுடன் இணைந்தார். சிலர் அஸ்வின் செய்தது சரியா? தவறா? என விவாதம் செய்து வருகின்றனர். இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றதை அடுத்து இந்த விவகாரம் பெரிதாக மாறவில்லை.
இந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவிடம் இது குறித்து போட்டி முடிந்த உடன் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. அப்போது பேசிய ரோஹித் சர்மா, அணியின் அதிக அனுபவம் கொண்ட பந்துவீச்சாளரை பாதியில் இழப்பது என்பது எளிதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் இல்லை. ஆனால், குடும்பம் தான் முதலில். அதே சமயம், அவர் மீண்டும் அணியுடன் வந்து இணைந்தது என்பது அஸ்வின் குணம் எத்தகையது என்பதை காட்டியது என்றார்.
அஸ்வின் குறித்து ரோஹித் சர்மா பேசியது : “ஒரு டெஸ்ட் போட்டியின் நடுவில் உங்கள் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளரை நீங்கள் இழந்தால், அது எளிதானது அல்ல. ஆனால் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, குடும்பம் தான் முதலில் வருகிறது. இந்தச் செய்தியைக் கேட்டதும், அவர் சரியென்று உணர்ந்ததைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்கள் மனதில் எழுந்தது”
“அவர் குடும்பத்துடன் இருக்க விரும்பினார், இது முற்றிலும் சரியான விஷயம். அது அவருக்கு சரியானதாக இருந்தது. மேலும், அவர் மீண்டும் திரும்பி வந்து, அணியில் இணைந்தது அவர் குணத்தையும், அவர் எந்த வகையான நபர் என்பதையும் காட்டுகிறது. அவர் திரும்பி வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்” என்று ரோஹித் சர்மா அஸ்வின் குறித்து கூறினார்.